பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16சீவக சிந்தாமணிஎன்ற பெயரில் கூனி வடிவில் அங்கு வந்து உதவியது. பழகிய முகம் போல் இருந்தது; அது தெய்வம் என்பதை விசயை அறிந்திலள்.

இருண்ட அவள் வாழ்வில் மின்னல் கீற்றுப்போல அந்தச் சின்னகுழந்தை அவளுக்கு ஆறுதல் தந்தது. வாழ்க்கையில் ஒளி கிடைத்தது போல இருந்தது; நாட்டைப் பிரிந்தாள்; கணவனை இழந்தாள்; துயரத்தில் உழந்தாள்; அந்த நிலையில் அவனைக் கண்டு மகிழ்ந்தாள்; கேட்டது தரும் கற்பகத்தரு போலவும், வேட்டது கொடுக்கும் காமதேனு போலவும் நல்கும் ஒளிமிக்க சிந்தாமணியாக அவன் அவளுக்கு விளங்கினான். கண்ணே மணியே என்று கொஞ்சாமல் தன் வாழ்க்கைக்கு ஒளி காட்டும் சிந்தாமணியே என்று அழைத்து மகிழ்ந்தாள். கொஞ்சும் சூழ்நிலையில் அவள் இல்லை; அஞ்சும் சூழ்நிலையில் அவள் கிடந்தாள்.

உதவிக்கு வந்த தெய்வம் அவளுக்கு வழி காட்டியது. அலமந்து நடந்து செல்வதற்கு அல்ல; அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அறிவிக்க.

“அரச மகன் பூமித்தாய் பெற்ற திருமகனாக அவதரித்துள்ளான்; முடிவிடத்தை முதலிடமாகக் கொண்டான். பிறப்பினால் ஒருவர் உயர்வு அடைவதில்லை. வளரும் சிறப்பினால்தான் அவன் மேன்மை அடைவான். இங்கே வெட்டிக்குப் போட்டு வைத்தால் இங்கே காவல் காக்கும் வெட்டியான்தான் எடுத்துச் சென்று வளர்ப்பான்; அதிகமாகப் போனால் அவன் ஒரு அரிச்சந்திரன் ஆக முடியும்; நீ அவனை எப்படி வளர்க்க முடியும்? கட்டியங்காரன் அறிந்தால் முளையிலேயே களைந்து விடுவான். அதனால் அவனைத் தக்கவரிடத்து விடுவதுதான் நீ செய்யத்தக்கது” என்று கூறினாள்.