பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18சீவக சிந்தாமணி“அவன் ஆயுள் கெட்டி; விழித்துக் கொண்டான்” என்று அவளிடம் சொல்லி அக்குழவியைக் கொடுத்தான். தன் மழலைச் செல்வம் தன்னிடம் சேர்ந்துவிட்டது என்பதால் அவள் மகிழ்ந்து அவனை வாரி எடுத்து அணைத்துக்கொண்டாள்.

செத்தவன் உயிர் பிழைத்தான் என்ற செய்தி வியப்பும் மகிழ்ச்சியும் விளைவித்தது. பறை அடித்த இடத்தில் முழவு ஒலித்தது. மகிழ்ச்சி ஆரவாரம் பெருகியது. கந்துக்கடன் மகன் பிழைத்தான் என்ற செய்தி கட்டியங்காரன் காதுக்கு எட்டியது. கந்துக்கடன் அவனுக்கு நெருங்கிய பந்துவைப் போலப் பழகியவன், நாமாவளி பாடி நல்ல பெயர் எடுத்தவன். அதனால் அவனும் பொன்னும், வாழ்த்துரையும் அனுப்பிவைத்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். வந்தவர்க்கு எல்லாம் பொன்னும் பொருளும் வாரித் தந்து தன் மகிழ்ச்சி வெள்ளத்தைக் கந்துக்கடன் தெரியப்படுத்தினான்.

சிறையில் தேவகி வயிற்றில் பிறந்த கண்ணன் யசோதையால் வளர்க்கப்பட்டதைப் போல இடுகாட்டில் பிறந்த சீவகன் சுநந்தையால் எடுத்து வளர்க்கப்பட்டான். இராசமாபுரம் கோகுலம் ஆகியது, பிறக்கும் குழந்தை சிறப்படைய அதற்குப் பெயர் சூட்டி அவனைப் பெரியோன் ஆக்க விரும்பினர்; சீவகன் என்ற பெயரே சிறந்தது என்று கந்துக்கடன் கழறச் சுநந்தை அதற்குத் தடை சொல்லவில்லை; செல்வக்குடியில் அவன் வளர்ந்தமையின் செவிலித் தாயர் அவனைச் செம்மையாகச் சீராட்டிப் பாலூட்டி வளர்த்தனர்; செவிக்கு வீரம் மிக்க கதைகளைச் சொல்லி அவனைப் புவிக்கு நாயகன் ஆக்க வழி செய்தனர்.

தாலாட்டி வளர்த்தபோது அவனுக்கு இசைக் கலை அறிமுகம் ஆகியது. முக்கால் தேரைச் செலுத்த வைத்து அவனை நடைபயிலச் செய்தனர்; யானை, தேர், குதிரை