பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாமகள் இலம்பகம்21செம்மையாக ஆட்சி செய்தால்தான் செழுமை சேரும்; அறம் நிலைக்கும்; மக்கள் மக்களாக வாழ்வர்.”

“உண்பதற்கு உணவும், உடுக்க உடையும், வாழ வசதிகள் மட்டும் இருந்தால் போதுமா! மாந்தர் ஒழுக்கம் மிக்கவராக வாழ வேண்டும்; இன்று எந்த நிலையில் நாடு இருக்கிறது; தலைவன் ஒழுக்கக் கேடனாக இருக்கிறான். காமக் கணிகையரை ஏமமாக அடைந்து இன்பக் கேளிக்கையில் ஈடுபட்டு நாட்டுப் பொருளை நாசம் ஆக்குகிறான். நல்லோர் உரைகளை நாடாது அல்லோர் இழி சொற்களைக் கேட்டு நெறி தவறுகிறான்.”

“இந்த நிலை மாறவேண்டும். அப்பொழுதுதான் நாடு சீர்ப்படும்” என்று கூறினார்.

“அவன் நாட்டு அரசன் ஆயிற்றே, அவனை எப்படி அகற்றமுடியும்?”

“அதுதான் இல்லை; இதிலே ஒரு வரலாறே அடங்கி இருக்கிறது. இந்த நாட்டை ஆண்டவன் சச்சந்தன் என்பவன்; அவன் ஆட்சிக் காலத்தில் நாடு சீராக இருந்தது. அவன் வயதில் இளைஞன், அதனால் அவன் ஒரு தவறு செய்துவிட்டான். அவன் மாமன் மகளை மணந்து ஆட்சியை இந்தக் கட்டியங்காரனிடம் ஒப்புவித்துத் தன் புது மனைவியோடு இன்பமாகக் காலம் கடத்தினான். கட்டியங்காரன் அப்பொழுது அமைச்சனாக இருந்தான். அவன் அரசனைக் கொன்று ஆட்சியைத் தனது உடைமையாக்கிக் கொண்டான்.”

“அரசனுக்குப் பிள்ளை குட்டி எதுவும் பிறக்க வில்லையா?”

“புத்திசாலித்தனமாக மயிற்பொறி ஒன்றில் தன் மனைவியை ஏற்றி அனுப்பினான்; அது இடுகாட்டில் இறங்கியது; அங்கே அவன் மனைவி ஒரு மகனைப் பெற்றாள்.”