பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்தருவ தத்தை இலம்பகம்33
 


எதற்காகக் கடலுக்குச் சென்று உடம்பு கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர் பேசினர்.

“ஊக்கம் இருந்தால்தான் ஆக்கம் வரும்” என்றும், “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்றும், “போகிற உயிர் கடலில்தான் போகும் என்று இல்லை; இங்கேயே திடீர் என்று சாகின்றவர் பலர் உள்ளனர்” என்றும் பேசி அவர்களை ஊக்குவித்தான். அவர்களுள் ஒரு சிலர் தம் பெண்டு பிள்ளைகளை விட்டுவிட்டுப் புதிய ஊர்களைக் காண்பதற்கு அவனுடன் சென்றனர்.

சங்குகள் திரியும் கடலில் சென்று புதிய ஒரு தீவினை அடைந்தனர். அத்தீவின் தலைவன் இவனை வரவேற்று இவனுக்கும், இவன் ஆட்களுக்கும் விருந்து வைத்து உபசரித்தான்; ஆடலும் பாடலும் அவர்களை மயக்கின. அழகிகள் சிலரை அவனுக்கு அனுப்பி வைத்தனர். புதுப்புது மங்கையர் மதுவகைபோல அவனுக்குக் கிளர்ச்சி உண்டு பண்ணினர். ஊரில் இருந்தால் வனப்புமிக்க இவ் வனிதையர் வாய்ப்பது அருமை என்பதால் அங்குத் தங்கி இன்புற்று நாட்கள் சில கழித்தான். கட்டிய மனைவி போல அவர்கள் கொட்டி வைத்த பூவாக இல்லை; மொட்டு மலரும் அரும்பாக அவனுக்கு மணம் ஊட்டினர்; பிரிய மனம் இல்லாமல் அத்தீவினை விட்டு வெளியேறினான். கொண்டு வந்த பண்டங்களை அங்கே இறக்கிப் போட்டு விட்டுக் கிடைத்தற்கரிய மணிகளையும், பொன்னையும், விலையுயர் முத்துகளையும், யானைத் தந்தங்களையும், அகில் சந்தனம் முதலிய விலைமிக்க பொருள்களையும் மரக்கலத்தில் நிரப்பிக் கொண்டு புறப்பட்டான், தீவின் தலைவன் அவனுக்கு வழி அனுப்பிவைத்தான்.

விரைவில் இவ்விலைமிக்க பொருள்களைக் கொண்டு சென்று தம் ஊரில் குவித்து மற்றைய வணிகர்கள் எல்லாம் பொறாமைப்படும்படி வாழ்க்கை நடத்தலாம் என்று கனவு