பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34சீவக சிந்தாமணிகண்டான். இவன் வருகைக்காகக் காத்திருக்கும் பதுமையை அடைந்து இந்தப் புதுமைகளைக் காட்டினால் அவள் அடையும் மகிழ்ச்சியை எண்ணிப் பார்த்தான். பழங்கள் போதை தரும், மனைவி அத்தகைய இன்பத்தைத் தரக் காத்துக் கிடந்தாள். அவள் அணைப்பில் பிரிவுக்குப்பின் பெறும் இணையற்ற சுகத்துக்கு ஏங்கிக் கிடந்தான்.

எதிர்பார்க்கவில்லை; வானத்து நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன; நிலா ஒளி வீசியது; நீலக்கடல் வழக்கம் போல் அலைகளை எழுப்பி ஒலம் இட்டுக் கொண்டிருந்தது; காற்றில் மேகம் புகுந்தது; அலைகள் மேல் எழுந்தன; காற்றும் மழையும் கலந்து கொண்டன. இவன் ஏறிச் சென்ற மரக்கலம் கவிழ்ந்துவிட்டது. அவன் கட்டிய கனவுகள் எல்லாம் கொட்டிவைத்த உப்புக்களங்கள் ஆயின. உயிருக்கே மோசம் ஏற்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தான். உடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பதை அறிய முடியவில்லை. அவர்கள் அத்தனை பேரும் நடுக்கடலில் ஆழ்ந்து நாசம் ஆகிவிட்டார்களா தப்பித்துக் கொண்டார்களா தெரியவில்லை.

சும்மா இருந்தவர்களை எழுப்பிக் கொண்டு வந்து அவர்கள் உயிர் இழக்கத் தான் காரணமாக இருந்ததை எண்ணிக் கவலையும் அச்சமும் கொண்டு மனம் தளர்ந்தான். உடன் வந்தவர் மறைந்து விட்டனர், ஓட்டைப் படகின் கட்டுமரத்துண்டு ஒன்று மட்டும் இவனுக்காகத் தெப்பமாகியது.

கண்ணுக்கு எட்டிய துாரம் கடல் நீர் தான் நீண்டு தெரிந்தது. இவன் ஏறிய கட்டுமரத்தின் ஒரு துண்டு அவனுக்குக் கரை ஏறமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியது. அதனைப் பிடித்துக் கொண்டு திக்கு முக்காடித் திக்குத் தெரியாத ஒரு மணல் மேட்டில் ஒரு பகுதியை அடைந்தான். நீர், மணல் இவை இரண்டைத் தவிர வேறு எதுவும் அவன் கண்களில் காணவில்லை.