பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்தருவ தத்தை இலம்பகம்35
 


கொண்டு வந்த பொருளை எல்லாம் மீண்டும் அலைகள் நிரம்பிய கடலில் வீழ்த்திவிட்ட அழிவு நினைத்து மனம் அழுங்கினான். உள்ளதைக் கொண்டு உவகையோடு வாழலாம் என்று சொல்லிய தன் உத்தமி வீட்டுத் துணைவி பதுமையை நினைத்து வருந்தினான். இலம்பாடு நாணுத்தரும் என்று பேசிய நிலை குறித்துச் சிந்தித்தான். அவள் கழுத்தில் பூண்டிருக்கின்ற தாலி அதையாவது காப்பாற்ற இயலுமா என்று ஏங்கினான். இங்கே உணவும் ஆதரவும் இன்றி உயிரை உதிர்க்க வேண்டி விடுமோ என்று அஞ்சினான்.

சற்றுத் தொலைவில் ஒரு பொழிலைக் கண்டான். ஞாழலும், புன்னையும் பூத்துக் கிடந்தன. நண்டுகள் பக்கத்தில் இருந்த அன்னத்தைக் கண்டு மருண்டு ஒதுங்க வில்லை; அந்த அன்னங்கள் அவற்றைக் கண்டும் காணாமல் தவயோகிகளைப் போல அவற்றைத் தின்னாமல் விட்டு வைத்தன; பூத்த மலர்களை உடைய பொழிலையும், அதை அடுத்து இருந்த அகிம்சா மூர்த்திகளாக விளங்கிய அன்னப் பறவைகளையும் கண்டதும் அவனுக்கு உயிர் தப்ப முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

யாராவது அங்கு வந்து தன்னைச் சந்திப்பார்களா என்று எதிர்பார்த்தான். உடனே வனதேவதை ஒருத்தி வந்து அவனுக்கு அன்னமிட்டு ஆதரிப்பாளா என்ற ஆவல் எழுந்தது; காட்டு மனிதர்கள் வேட்டையாடுவோர் வந்தால் மூட்டையை அவிழ்த்துக் காட்டு என்று சொன்னால் என்ன செய்வது; பொருள் இல்லை என்பதால் அவர்கள் அருள் காட்ட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. விண்ணில் இருந்து யாராவது தேவதூதன் வந்து தன்னை அழைத்துச் சென்று விருந்து வைத்தால் எப்படி இருக்கும் என்ற சின்ன ஆசையும் தோன்றாமல் இல்லை.