பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்தருவ தத்தை இலம்பகம்37
 


செய்வான்; உன் மரக்கலமும் அதில் உள்ள மானுடமும் உன்னை வந்து அடையும்” என்றான்.

மந்திரத்தால் மாங்காய் விழாது என்று சொல்லுபவர்கள் மடையர்கள்; மாங்காய் விழும் என்ற நம்பிக்கை அவனுக்குப் பிறந்தது. பக்கத்திலே ஒரு ஆட்டுக்கிடாய் நின்று இருந்தது. அதற்கு இறக்கைகளும் இருந்தன. அதைக் கண்டு இவனுக்கு வியப்பு உண்டாகியது.

“இதில்தான் நீர் இறங்கி வந்தீரா?” என்றான்.

“இது வான ஊர்தி; விஞ்ஞானம் வளர்ந்த இந்த உலகில் எதை வேண்டுமானாலும் பறக்க வைக்கமுடியும்; எங்கள் வித்தியாதர உலகில் இப்படிப் பல புதிய படைப்புகள் கண்டு பிடித்திருக்கிறோம்” என்றான்.

“எங்கள் இராசமாபுரத்தில் கூட மறைந்த மன்னன் சச்சந்தன் மயிற்பொறி ஒன்றைச் செய்து அதில் நாட்டு அரசியை ஏற்றி அனுப்பினான்; அதில் ஏறித்தான் விசயமாதேவியும் உயிர் தப்பினாள்” என்றான்.

“அது மயிற்பொறி, ஒருவர் தான் போக இயலும்; இது ஆட்டுக்கிடாய்; நாம் இருவரும் ஏறிச் செல்லலாம்” என்றான்.

சீதத்தன் ஆட்டுக்கிடாயின் பின் பக்கம் இருந்தான்; அவனுக்கு முன் பக்கம் அந்த விந்தையன் அமர்ந்தான். நம் நாட்டு இக்காலத்தில் ஸ்கூட்டரில் செல்வதைப் போல ஏறி அமர்ந்து சிறிது நேரத்திற்கெல்லாம் விண்வழியே வட திசை நோக்கிச் சென்றனர். மலைகளும் குன்றுகளும் மேலே இருந்து கீழே பார்க்கும்போது அவை மாடுகளும் ஆடுகளும் போலக் காட்சி அளித்தன. மேகங்கள் இவன் ஏறிச் சென்ற விமானத்தின் கீழ்த் தவழ்ந்து சென்றன, அந்தப் பயணமே அவனுக்குப் புதுமையாக இருந்தது.