பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40சீவக சிந்தாமணி



“தக்க விலை கிடைக்கவில்லை. அவளைக் கட்டிக் கொள்ள மன்னர்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். அவள் ஒரே பிடிவாதமாக இருக்கிறாள். இராசமாபுரத்துக்குப் போகவேண்டும். அங்கே தான் தனக்கு மாப்பிள்ளை கிடைப்பான் என்று சொல்கிறாள்.”

“காரணம்”

“அவளுக்குச் சாதகம் கணித்தவர்கள் அப்படிச் சொல்லி விட்டார்கள்; அதை அவளும் நம்புகிறாள்; எங்களுக்கும் அந்த நம்பிக்கை ஆழப் பதிந்து விட்டது.”

“அம்மா என்ன சொல்கிறார்கள்?”

“அரசியா? துரத்தில் எப்படி நம் பெண்ணை அனுப்புவது? ஏதாவது ஆனால் எப்படி நாம் போய்ப் பார்க்கமுடியும்? மகளை விட்டு எப்படிப் பிரிந்து இருக்க முடியும்” என்று கூறுகிறாள்.

“அதுசரி, எப்பொழுது ஆனாலும் அவள் இன்னொரு வீட்டுக்குப் போக வேண்டியவள் தானே! இராசமாபுரத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே” என்றான் சீதத்தன்.

“இந்த ஊரில் பிள்ளைகள் பார்க்க லட்சணமா இருப்பார்கள்; ஆனால் படிப்பு சூனியம்; அவனவன் தனக்குப் பிரியமானவளோடு காதல் கொண்டு காந்தருவ மணம் செய்து கொள்வான்; கேட்டால் ‘காதல் மணம்’ என்பார்கள். பெரியவர்கள் சம்மதம் தரும் வரையிலும் காத்துக்கொண்டிருக்க முடியாது என்பார்கள். அவசரப் படுவார்கள். அப்புறம் விவாகரத்து செய்துவிடுவார்கள். அது இந்த நாட்டுப் பழக்கம். இதை ‘காந்தருவ மணம்’ என்று சொல்லி மற்றவர்களும் இப்பொழுது பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.”