பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42சீவக சிந்தாமணி



பார்த்தான்; சிற்பி செதுக்கிய சிலை போல மூக்கும் விழியுமாக இருந்தாள்; இடை மட்டும் மிகவும் மெலிந்திருந்தது; அப்படித்தான் இருக்கவேண்டும் என்று தமிழ்க் கவிஞர்கள் சொல்லி இருப்பது நினைவுக்கு வந்தது; மூடி வைத்திருக்கும் அழகை எல்லாம் அவனால் ஊடுருவிப் பார்க்க இயலாது; கவர்ச்சி உடையவள் என்பதை அறிந்தான். வீட்டுக்கு அழைத்துச் சென்றால் பதுமை அனுமதிப்பாளா என்ற மெல்லிய அச்சம் அவனைக் கிண்டியது. மகள்தானே! அவள் மறுக்க மாட்டாள் என்று மனம் உறுதி செய்து கொண்டான்.

“என்னம்மா படித்து இருக்கிறாய்?”

“இசை பயின்று இருக்கிறேன்.”

“அதில் இசைபெற வேண்டும் என்று விரும்புகிறாயா?”

“திசை எங்கும் என் புகழ் பரவ வேண்டும்; அந்த ஆசை உள்ளது” என்றாள்.

“இசை கற்றதால் இசைக் கலைஞனையே மணக்க விரும்புகிறாயே அது சலிப்புத் தட்டாதா?”

“மன ஒற்றுமை ஏற்பட அதுதான் வழி; ஒருவரை ஒருவர் மதிக்க முடியும்; இன்ஜினியர் டாக்டரைக் கட்டிக் கொண்டால் முரண்பாடுகள் தான் நிகழும்; இது கலை உலகம்; மற்றவர்கள் எம் நுண்ணிய உணர்வுகளை மதிக்க மாட்டார்கள்; வீணை கொண்டு பாடத் தொடங்கினால் “அடுப்பில் புகை எழுகிறது; நீ எழுந்து கவனி” என்றால் நான் என்ன செய்ய முடியும்? அலுத்து வரும் கணவனுக்கு யாழ் எடுத்து இசை கூட்டினால், “நீ வேறு வந்து அறுக்க வேண்டுமா? அதைத் தூக்கிக் குப்பையிலே போடு” என்று சொன்னால் நான் என்ன செய்ய முடியும்”.