பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காந்தருவ தத்தை இலம்பகம்43
 


“இந்த வெள்ளிமலை எனக்கு அலுத்துவிட்டது அழகு மட்டும் இருந்தால் போதுமா? ஆரவாரமும் இருக்க வேண்டும்; செல்வம் மட்டும் இருந்தால் போதாது. அதைக் கொண்டு தொழில்கள் வளர்ப்பதைக் காண வேண்டும். கறியும் சோறும் படைத்து உண்பதால் மட்டும் பயன் இல்லை; அதைச் சமைக்கும் தொழிலிலும் பங்கு கொள்ள வேண்டும்; இங்கே வருபவர் வீட்டு மாப்பிள்ளையாக ஒட்டிக் கொள்ளவே வருவார்கள் அல்லது அலங்கார பொம்மையாக என்னை வைத்து அழகு பார்ப்பார்கள். வீரம் மிக்க செயல்கள் ஆற்றித்தரும் இளைஞனுக்கு யான் தாரமாக வேண்டும்; அவனுக்குப் புகழ் சேர்க்க நான் உறுதுணையாக நிற்க வேண்டும். கண்ணுக்கு நிறைந்தவனாக இருந்தால் மட்டும் போதாது; மண்ணுக்கு உதவும் மாவீரனாகத் திகழ வேண்டும்; அந்த ஆசைகளுக்கு இந்தக் காந்தருவ உலகில் வாய்ப்பு அமைவதில்லை. அதனால் தான் யானும் என் தந்தை விருப்பப்படி உம்மோடு வர விழைகின்றேன்” என்றாள்.

“கொண்டு வந்த பொருளையும், என்னை அண்டி வந்த இளைஞரையும் இழந்து நிற்கிறேன். இந்த எளிய நிலையில் திரும்பிச் செல்வது என்றால் விரும்பத்தக்கது அன்று” என்றான்.

“அவை நீ விட்டு வைத்த இடத்திலேயே கட்டி வைத்திருக்கிறோம். இவை எல்லாம் எங்கள் கட்டுவித்தை; நீ கலத்தில் வருகிறாய் என்று எங்களுக்குத் தெரியும்; உன்னை மடக்கிப் பிடிக்கவே இந்த இடக்கினை விளைவித்தோம்” என்றான்.

“நாங்கள் மந்திர சக்தியால் இவற்றைச் செய்து முடிக்கிறோம்; விஞ்ஞான உலகம் இதை எதிர்காலத்தில் செய்துகாட்டும்; தூர இருந்தே கப்பல்களைக் கவிழ்க்கும் நுண் கருவிகளை இந்த உலகம் காணத்தான் போகிறது.