பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44சீவக சிந்தாமணி



இன்று நாங்கள் விரைவில் பறக்கும் விமானங்களைப் படைத்து இருக்கிறோம். எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றை எல்லாம் கண்டு பிடிக்கும்; எங்கள் கற்பனையில் காண்பவை எல்லாம் அறிவு உலகம் ஆக்கித் தரும்” என்றான் கலுழவேகன்.

அங்கு ஒரு சில நாட்கள் வித்தியாதர அரசனின் விருந்தினனாகத் தங்கி இருந்தான். காந்தருவதத்தை அவனோடு புறப்பட ஏற்பாடுகள் செய்து கொண்டாள். பெற்றவளால் இப்பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் நீர் முத்துப்போல் தொத்திக் கொண்டு விழலாமா வேண்டாமா என்று காத்துக்கிடந்தது. கண்ணுவ முனிவரின் ஆசிரமத்திலிருந்து பிரிந்து செல்லும் சகுந்தலையின் தாய் ஆனாள். அவள் கற்றவள் ஆதலின் கலங்கவில்லை. தாயைத் தழுவிக் கொண்டு விடை பெற்றாள். கலுழவேகன் அவள் தாய்க்கு ஆறுதல் கூறினான்.

“சங்கு ஈனும் முத்து அது கடலிலேயே தங்குவது இல்லை. கரை ஏறி அதைக் கண்டெடுக்கிறவர்க்கே பயன்படுகிறது. அதை அவர்கள் ஆரமாகக் கோத்து மகிழ்கின்றார்கள்; முத்து இருக்க வேண்டிய இடம் கத்தும் கடல் அலையில் இல்லை. அது மங்கையர் மார்பில் தங்கி அவர்கள் அங்க அழகுகளுக்குத் துணை செய்யும் போதே பெருமை பெறுகிறது.”

“யாழிலே யிறக்கும் இசை யாழுக்குப் பயன்படுவது இல்லை; அது நுகர்பவருக்கே பயன்படுகிறது. மலையுளே சந்தனம் பிறக்கிறது. அது அரைத்துப் பூசிக் கொள்பவர்க்கே மணம் ஊட்டுகிறது. எண்ணிப் பார்த்தால் உன் மகளும் உனக்கு அத்தகையவளே.”

“நீயும் ஒரு காலத்தில் கன்னிப் பெண்ணாக இருந்தாய்; அன்னையின் மடியில் அழகாகத் தவழ்ந்து