பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46சீவக சிந்தாமணிவிமானத்தில் இருந்து இறங்கும் புதிய மனிதர்களைக் கண்டு அவர்கள் வியந்தனர். கையில் வீணையோடு இறங்கிய வித்தகியைக் கண்டு அவர்கள் மெத்தவும் திகைத்தனர். விண்ணில் இருந்து இறங்கியதால் பண்ணில் இசைபாடும் கலைமகளாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதினர்; அவள் வயதில் குறைந்தவளாக இருந்ததால் பிரமனின் மனைவி அல்லள் என்பதைக் கண்டு கொண்டனர். நான்முகன் உடன் வராததால் இவள் மானுட மகள்தான் என்பதை அறிந்தனர்; காந்தருவ நாட்டுக் காந்தாரப் பண்பாடும் இசைக்குயிலோ என்று வியந்தனர்; அவள் தத்தை மொழி பேசுவதால் இவள் காந்தருவ தத்தையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இவர்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தனர். வித்தியாதர நாட்டில் காந்தருவ தத்தை என்ற பேரழகி ஒருத்தி இருக்கிறாள் என்றும், அவள் வீணை வித்தகி என்றும் கேள்விப்பட்டிருந்தனர். அவர்கள் வாழ்க்கையில் அத்தகைய பேரழகியைக் காண முடியுமா என்று ஏங்கி இருந்தனர்.

வாணிபம் செய்ய வந்த இடத்தில் வான் நிலவு போன்ற வடிவ அழகியைக் கண்டு அவர்கள் வியப்பு உற்றனர். சீதத்தன் வாய் திறந்து பேசுவான் என்று எதிர்பார்த்தனர். இவனும் அவர்கள் எப்படிப் பிழைத்தார்கள் என்று அறிய ஆவல் உடையவனாக இருந்தான்.

“கடலில் கலம் முழுகவில்லையா?” என்று கேட்டான்.

“காற்றடித்தது உண்மை, மழை பொழிந்தது உண்மை; ஆடியது உண்மை; பிறகு என்ன நடந்தது என்பது எங்களுக்கே தெரியவில்லை; அது கரை வந்து சேர்ந்தது; கலக்கமில்லாமல் இருக்கிறோம்; உம் நிலைக்குத்தான் வருந்தி இருந்தோம்” என்றனர்.