பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50சீவக சிந்தாமணி



“வேண்டாம்; வயதுப் பெண்; வாய்க்கு வந்தபடி கதை கட்டுவார்கள். கன்னி மாடத்தில் விட்டு வையுங்கள் அவளும் சுதந்திரமாக இருக்கமுடியும்” என்றாள்.

“நீ சொல்வதும் உண்மைதான்; அவள் சுகமாகப் பாடிக் கொண்டிருப்பாள். நம் நித்திரை கெடும்; ஆட்கள் வேறு அதிகம்; இந்தக் கூட்டத்தை இங்கு வைத்துச் சமாளிக்கவும் முடியாது” என்றான்.

தத்தை கன்னிமாடத்தில் தங்க வைக்கப்பட்டாள். சீதத்தன் படுக்கச் சென்று ஒய்வு கொண்டான்.

பிரிந்தவர் கூடினர்; என்றாலும் பேசிக் கொண்டே பொழுதைக் கழித்தனர்.

பொழுது விடிந்தது; மற்றைய கருமங்களைத் தம் ஆட்கள் கவனிக்கச் சென்றனர்; சீதத்தன் கட்டியங்காரனைப் பார்த்துவரச் சென்றான்; பெரியவர்களைப் பார்க்கும்போது வெறுங்கையோடு போக முடியாது; எதுவும் இல்லை என்றால் பச்சை எலுமிச்சம் பழமாவது கொண்டு போக வேண்டும் என்பதை அறிந்தவன்.

தீவில் இருந்து கொண்டு வந்த விலை மிக்க கற்களைக் கொண்ட அணிகலன்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவனுக்குக் காணிக்கையாக்கினான்.

“கடல் கடந்து வணிகம் செய்யச் சென்றேன்”.

“ஈட்டியது ?”

“மிகுதிதான்; அதைவிடக் காட்டத்தக்கது ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்.”

“எடுத்துக்காட்ட இயலுமா?”

“இல்லை; நம் நாட்டவர்க்ககு காட்ட ஒர் அழகியைக் கொண்டு வந்து இருக்கிறேன்.”