பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56சீவக சிந்தாமணிஅன்ன அவளைக் கண்டு அவரவர் மனப்போக்கிற்கு ஏற்ப அவளை நயந்தனர்; மகளிர் அவள் உடுத்தியிருந்த சேலை, அணிந்திருந்த கலன்கள், கூந்தல் முடிப்பு, இதழ்ச் சிவப்பு இப்படித் தனித்தனியே கூறுபடுத்திப் பேசினர். காளையர் அவள் தந்த வளர்ச்சியில் வந்த கிளர்ச்சியைப் பேசினர். குழந்தைகள் அவர்கள் பழகிய பொம்மையைப் போல அந்த அம்மை இருப்பதாகப் பேசிச் சிரித்தனர்; கலைஞர்கள் அவள் வாயசைவை எதிர் பார்த்தனர்; ரசிகர்கள் பாட்டொலி கேட்கச் செவிகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டனர்.

இசை இலக்கணம் சிறிதும் தவறாது குரலில் எந்தவிதக் கோளாறும் இன்றிக் கோயில் மணியில் ஒலிக்கும் நாதம் போல் கணிர் என்று பாட்டிசை கிளம்பியது; புருவம் நிமிரவில்லை; விழிகள் பிறழவில்லை; மிடறு வீங்கவில்லை; பற்கள் வெளியே காட்டவில்லை; அங்க அசைவுகள் இன்றிப் பாடல்கள் தங்கு தடையின்றி வெளிவந்தன; அவள் மீட்டிய வீணையின் நாதத்துக்கும் வாயில் இருந்து வெளிவந்த கீதத்துக்கும் அவர்களால் வேறுபாடு காண முடியவில்லை. “வாய் திறந்து இவள் பாடினாளோ நரம்பொடு வீணைதான் நாவில் நவின்றதோ” என்று வியந்து பாராட்டினர்.

ஆயிழையாகிய தத்தை பாடியபோது இசையை விரும்பும் பறவைகள் ஆகிய கின்னரம் எங்கிருந்தோ ஓடிவந்து அந்த அரங்கில் புகுந்தன; மற்றவர்கள் பாடிய போது பறையொலி கேட்ட அசுணம்போல் அவை பதை பதைத்து வெளியேறின. அரசர்கள் தோற்றனர்; அவர்களை அடுத்து அந்தணர்கள் தோற்றனர்; அதற்குப்பின் வணிகர்கள் தோற்றனர். சாதி அடிப்படையில் பாடகர்கள் வரிசைப் படுத்தப்பட்டனர். சூறைக்காற்றுக்கு ஆற்றாது தலைசாய்ந்து கரிந்த தாமரைகள் போன்று அவர்கள்