பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்61



அவனை இழப்பது உறுதி, அவள் தனக்குத் தானே வேலி போட்டுக் கொண்டாள்” என்று பேசியவர் பலர்.

“வெற்றி தோல்வி அவளிடத்தில் தானே இருக்கிறது; அவள் விட்டுக் கொடுத்தாலும் விட்டுக் கொடுப்பாள்; இசையில் தோற்றால் அவள் வாழ்க்கையில் வெற்றி பெறுவாள்” என்று ஒரு சிலர் தம் கருத்தை வெளிப்படுத்தினர்.

மேடையில் இருந்த இசைவாணி காந்தருவ தத்தை இவ் இளைஞனைப் பார்த்து அவன் அழகில் மயங்கினாள். இசையில் தான் வென்று விட்டால் என்ன செய்வது என்று அஞ்சினாள். வேண்டுமென்றே தோற்று அவனை அடையும் கீழ்மைக்கு அவள் செல்லத் துணிய வில்லை. அது அவள் பெருமைக்கு இழுக்கு இசையில் தன் புகழை நிலை நாட்டுவதில் இருந்து அவள் பின்வாங்க விரும்பவில்லை. அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்ள விழையவில்லை. விட்டுக் கொடுக்கவும் விரும்பவில்லை. அது தன்னைத் தானே அழித்துக் கொள்வதாகும்” என்று முடிவு செய்தாள். விதியின் விரல்கள் எப்படி எழுதுகிறதோ அதன்படி நடப்பது என்று உறுதி கொண்டாள்.

அவளுக்கு வீணாபதியின் மேல் அடக்க முடியாத கோபம். வீணாபதி என்ற பெயருக்கு ஏற்ப அவள் காலத்தை வீண்படுத்துகிறாள் என்று நினைத்தாள். “இனி பொறுப்பதில்லை” என்று எரிந்து விழுந்தாள்.

“யாழ் எடுத்துக் கொடு” என்றாள்.

பாழ்பட்ட அவள் அவசரத்தை அறியவில்லை; விதி முறைப்படி அவன் இசைப் புலமையை அறியத் தேர்வுகள் வைத்தாள்; அவன் இசைஞானி என்பதை வசையற உலகுக்கு உணர்த்த வேண்டும் என்ற உயர் சிந்தனையும் அவளுக்கு இருந்திருக்கலாம். அவன் முறைப்படி யாழ் மீட்டினால் மட்டும் போதாது; அதன் அமைப்புகளையும்