பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்67அவனது, வில் எடுத்து விறல் காட்டத் தெரியாதவன். விழித்து எழுங்கள்; அழித்து ஒழியுங்கள்” என்று வீரவசனம் பேசினான்.

அவர்களுக்கே நயப்பாசை தோன்றியது; இந்த அற்பப் பையலை ஒழித்து விட்டால் அவள் நமக்குக் கிடைப்பாள் என்ற சொற்ப ஆசை அவர்களைத் துாண்டியது. அவரவர்கள் கத்தியும் சுத்தியும் எடுத்துக்கொண்டு சீவகனை வளைத்தனர். மறைந்திருந்த அவன் தம்பியரும் தோழர்களும் படைகளோடு வந்து அவனுக்கு அரணாக நின்றனர்; முரண்பட்டவர்கள் அத்தனை பேரும் அரண் தேடி நான்கு திசையும் ஓடினர்.

இசை மண்டபமே மணமண்டபம் ஆகியது. மன்னர் கூட்டம் ஒட்டம் பிடித்தது. நகரமாந்தர் இருந்து மண விழாவினை நடத்தித் தந்தனர்.

காந்தருவ தத்தையை மணந்த அவன் அவள் காந்த சக்தியால் இழுக்கப்பட்டவன் ஆனான். அவள் அதீதமான அறிவுடையவள் என்பதை அறிந்தான்; அவள் புற அழகில் மயங்குவதைவிட அவள் அறிவு ஆற்றலில் தன்னைப் பறி கொடுத்தான். யாழும் வாய்ப்பாட்டும் இணைந்து இனிமை ஊட்டுவது போல அவ்விருவரும் இணைந்து இன்பம் பெற்றனர். அவள் யாழ் ஆனாள், அதை மீட்டும் வில்லாக அவன் செயல்பட்டான். செய்தி அறிந்த கலுழவேகன் சீர்கள் அனுப்பி அவன் தன் வாழ்த்தினைத் தெரிவித்தான்.

எங்கோ வடபுலத்து இட்ட கயிறு கடலில் அடித்துக் கொண்டு தென்புலத்துக்கு வந்து ஒரு நுகத்தடியின் துளையில் தானாக வந்து அகப்பட்டுக் கொள்வதைப் போல வட புலத்திலிருந்து வந்த நங்கை சீவகனை மணாளனாகப் பெற்றாள். அவனும் அந்தக் காதல் கலப்பை வியந்து பாராட்டினான்.