பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72சீவக சிந்தாமணி



“ஆகா! பெரிய கண்டுபிடிப்பு, நீங்கள் நாடக வசனம் எழுதத்தான் தகுதி, யாரைக் கேட்டால் நல்ல தீர்ப்புக் கிடைக்கும்?”

“அப்படிக் கேளுங்கள்; சொல்கிறோம். சீவகன் அவனைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! காந்தருவ தத்தையோடு வீணைப் போட்டியில் கலந்து கொண்டவன்; அவன் இந்த மாதிரி விவகாரங்களில் கைதேர்ந்தவன்; அநங்க மாலைக்கு அவன் ஒப்பனை செய்தவன்; அவன் பல நிறச் சுண்ணங்கள் அப்பியவன்; அவனைக் கேட்டால் தப்பாமல் சொல்வான். அது மட்டுமல்ல; அவன் மணந்து கொண்டது காந்தருவ நாட்டுப் பசுங்கிளி. அவன் எண்ணத்தைக் கேளுங்கள். அவன் திண்ணமாகத் தீர்ப்புக் கூறுவான்” என்று கூறித் தப்பித்துக் கொண்டனர்.

“என்ன இந்தப் பிள்ளைகள் மோசமாக இருக்கிறார்கள்; ரசனையே இல்லாதவர்கள்” என்று விசனமாக அவர்களை விட்டு “இசை ஞானி” என்ற பெயர் வாங்கிய இளவரசன் சீவகனிடம் சென்றனர்.

சேலைகள் தன்னை நோக்கி வருவதை வேலைத் தாங்கிய வீரனாகிய சீவகன் பார்த்தான்.

“ஐயா! ரசிகர் தலைவரே! உம்மால் அழகை ரசிக்கத் தெரியுமா?” என்று கேட்டனர்.

“உங்களை ரசிக்க முடியாது; அழகை ரசிக்கத் தெரியும்” என்றான்.

“அழகு அதிகம் இல்லாததால் தானே இந்த அடிமைத் தொழில் செய்கிறோம். பூக்களை ரசிக்கத் தெரியுமா?” என்று காட்டினாள்.

“பாக்களை ரசிப்பேன்; திருத்தக்க தேவர் எழுதும் கவிதைகள் என் உயிர்” என்றான்.