பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78சீவக சிந்தாமணி
 


“அவள் அவனுக்கு மாலையிட்டபோது நீ ஏன் மவுனம் சாதித்தாய்! வாழ்த்த மேடை ஏறி உன் வாய்திறந்து சொல் முத்துக்களை உதிர்த்து இருக்கலாமே! நீ அடித்த கல் குறி தவறவில்லை; அதுகாய்மீது பட்டு உன் மடியில் வந்து விழுந்து விட்டது; மாங்காய் உனக்குப் புளிக்கப் போகிறது” என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உரையாடினாள்.

அவள் பகைபாடிப் பகர்ந்த அத்தனை வசைகளும் அவை உள்ளத்தில் காதலைப் புகைய வைத்தன. அவை அவள் காதலுக்குத் துாபம் போட்டதுபோல் இருந்தன. நிச்சயம் அத்தகைய வாய்ப்புக் கிடைக்குமா என்று எண்ணத் தொடங்கினாள். எட்டாத கனியாகுமோ என்றும் எண்ணிப் பார்த்தாள்; அந்தச் சின்ன ஆசையை உண்டாக்கியதால் மஞ்சரியை வாழ்த்தினாள்.

சுரமஞ்சரி காதலில் தோல்வியுற்றவர் சரண் அடையும் சரணாலயம் ஆகிய கன்னிமாடத்தில் இருந்து தனிமையில் இருக்க விரும்பினாள். தன் தந்தையிடம் சொல்லித் தானே ஏன் ஒரு கன்னிமாடம் கட்டித் தரச் சொல்லக்கூடாது என்று துணிந்தாள். அவனை நெஞ்சில் வைத்து வழிபட அது ஒரு ஆலயமாக அமையும் என்று கருதினாள். அதுமட்டுமின்றித் தன்னைப் போல் அடிபட்டு முடம்பட்டுப் போன இளஞ்சிட்டுகள் வந்து தங்குவதற்கு அது ஒரு கூடாக அமையுமே என்றும் நினைத்தாள்.

தமிழ் நாட்டுத் தவச் செல்வியாகச் சென்றவள் அரபு நாட்டு முழுமையாக வீடு வந்து சேர்ந்தாள். தில்லித் துருக்கர் செய்த வழக்கத்தைப் பின்பற்றினாள்; வானத்து மதியைக் கரிய மேகங்கள் மறைத்து விட்டன.

நீராடி வரச் சென்றவள் போராடி வீடு திரும்பினாள். இணைச் செருப்பாகச் சென்றவர்கள் தனிச் செருப்பாக வீடு சேர்ந்தாள்.