பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84சீவக சிந்தாமணிதனிமை அவனை வாட்டியது; சோலைக் கிளியைக் காண அவன் உள்ளம் துடித்தது; மாலை வேறு வந்தது; அது மயக்கம் தந்தது. அக்கம் பக்கத்தவர் அடிக்கடி வந்து அவன் மோனத் தவத்தைக் கலைப்பதை அவன் விரும்பவில்லை. அவளைப் பற்றி அமைதியாக நினைத்துக் கொண்டு அந்த அலைகளில் நீந்தி விளையாடி ஊர்ப் புறத்துச் சோலையில் சென்று ஒரு மேடைமீது அமர்ந்தான். கூட்டில் வந்து அடங்கும் பறவைகள் முணுமுணுத்துக் கொண்டு திட்டிக்கொண்டு இருப்பது போல ஒலிகள் எழுப்பிச் சின்னக் குழந்தைகளின் கன்னக்குமிழிகளைக் காட்டிக் கொண்டிருந்தன.

கேள்விகளை விட்டு விட்டுத் தேர்வுகளைப் பற்றியே எண்ணி வருத்தப்படும் மாணவனைப் போல அவனிடம் பேசாமல் வீடு வந்தமைக்கு மனம் நொந்து கொண்டு தேள் கொட்டியதைப் போலத் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பது அறிந்த தாய் அதைக் கேட்டுத் கொலைக்காது மூடியை எடுக்காத பாத்திரமாக அவளைப் பார்த்தாள்.

யானைக்காக இவள் பானைச் சோற்றில் ஒருபருக்கை கூடச் சாப்பிடாமல் இருக்கத் தேவை இல்லை; அவள் இளமை நினைவுகள் அவள் முன் நின்றன.

“யாரைக் கண்டாய், பேரைச் சொல்வாய்” என்று கேட்பது அநாகரிகம் என்று சொல்லி அவள் அழுகைச் சுதந்திரத்திற்குத் தடையுத்தரவு போட விரும்பவில்லை.

“எப்படியும் அவள் சொல்லித்தான் தீர்வாள்; கிளி இருக்கிறது; அதனிடம் பேசித் தன் துயர் ஆற்றிக் கொள்வாள்” என்று மனம் அமைதி கொண்டாள்.

ஆரம்பப் பள்ளிச் சிறுவன் போல் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை அவள் மவுனத்தைக் கலைத்தது.