பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92சீவக சிந்தாமணி



‘தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு’ என்ற குறளின் விளக்கத்தை அவளிடம் அறிந்து பாடம் படித்துக் கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் மதனின் தடியாட்கள் அடியாட்கள் போல் வந்து நின்றனர்.

சிப்பாயைக் கண்டு அஞ்சிய காலம் அது; வீட்டுப் பாயை மடக்கி வைத்துவிட்டு வெளியே வந்தான்; அவளும் தன்சேலையைச் சரிசெய்து கொண்டு பின்னணியில் வந்து நின்றாள்.

“அசையக் கூடாது” என்றான்.

காப்புக்கலையாத அவன் கைகளுக்குக் காப்பு இட அழைத்தனர்.

நந்தட்டனிடம் பதுமுகனைக் கொண்டு படை திரட்டுக என்று குறிப்புக் காட்டிவிட்டு மதனன் அருகில் வந்தான். அவன் சீவகனை நெருங்க அஞ்சி அகன்று நின்றான்.

“உன்னை அழைத்து வர அரசன் ஆணை” என்றான். சம்பிரதாயம் கருதிக் கந்துக்கடன், “அரசன் அழைத்தால் போய்த்தான் தீரவேண்டும்; மறுக்காதே; அது நல்ல பிள்ளைக்கு அழகு அல்ல” என்றான்.

சுநந்தையும் “அப்பா சொல்லைக்கேட்பதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்” என்றாள். அவனும் வேறுவழி இல்லாமல் நல்ல பிள்ளையாக நடக்க முயற்சி செய்தான்.

அவனுக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று நண்பர்களை விட்டு ஊரைக் கொளுத்திக் குழப்பம் விளைவித்து அவர்களைத் திசை திருப்பிவிட்டுத் தான் தப்புவது; அடுத்தது காந்தருவதத்தையின் மந்திர சக்தியால் அவர்களிடமிருந்து தப்பிச் செல்வது; மற்றொன்று தன் நண்பன் சுதஞ்சணன் அவன் உதவியால் தப்பித்து வெளியேறுவது;