பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இவ்வாறாக இந்திரசித்து பொறுக்க முடியாதவனாய், தம்பிமேல் உள்ள அன்பால் அறிவு அழிந்து சோர்ந்த போது, அனுமன் மேல் தோன்றிய சினம் அவனது ஆற் றொணாத்துயரத்தை உள்ளே அடங்கியிருக்கச் செய்தது. இது நீட்டிக் கொண்டிருக்கும் ஒர் ஆணியை உள்ளே செலுத்த வேறு ஒர் ஆணியால் அடித்தல் போன்றிருந்தது: “ஆற்றலனாகி, அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை சீற்றம் என்றொன்று தானே மேல் நிமிர் செலவிற் றாகித் தோற்றிய துன்ப நோயை உள்ளுறத் துரந்தது அம்மா! ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன?” (22) முள்ளை முள்ளால் எடுத்தல் என்பார்கள், இது வெளி யாக்கும் முயற்சி, ஆணியை ஆணியால் அடித்தல் என் பதோ, அதற்கு எதிர்மாறானது; அதாவது அடித்து உள்ளே அடங்கச் செய்தலாகும். அனுமன் இலங்கையை எரியூட்டிய போது, அரக்கரும் அரக்கியரும், பறவைகள்- விலங்குகள் முதலிய மற்ற உயிரினங்களும் பட்டபாடு சொல்லுந் தரத்தன்று. உயிரில் லாத அஃறிணைப் பொருள்களும் வெந்து கருக அனைவர் துயரத்திற்கும் அளவேயில்லை. பஞ்சரத்தோடு கிளிகள் வெந்து மடிய, மகளிர் தம் கண்களினின்றும் பெருகும் நீர் அருவி முலைப் பகுதியை அலைகழிக்கத் தம் கணவரைக் கட்டித் தழுவிக் கொண்டு, முகிலுக்குள் புகும் மின்னலைப் போல் புகைக்குள் மறைந் தனர். புகைக்குள் மறைந்த சில பெண்டிரின் தோற்றம், திரையால் மறைக்கப்பட்ட சித்திரப் பாவையின் தோற்றம் போல் இருந்தது: