பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒவ்வொரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வகையான துன்பியல் கண்ணோட்டங்கள் இலக்கியப் படைப்பின் ஆதார அம்சங்களாக விளங்கின என்பதால் துன்பியலுக்கும் வரலாற்றுக்குமுள்ள தொடர்பு பற்றிய சிந்தனை நம் முன் எழுகின்றது. மனித சமூக வரலாறு என்பது முன்னோக்கி வளர்ந்து வந்துள்ளதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். பல்வேறு வகையான வரலாற்றுக் கட்டங்களினூடே நடை போட்டு மனிதன் இன்றைய வரலாற்றுச் சூழலை எட்டியுள்ளான். இந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கென்பது இடையீடில்லாத படிப்படியான பரிணாம வளர்ச்சிப் போக்காகவும் பண்பியல் மாற்றங்களை உருவாக்கும் பாய்ச்சலுடன் கூடிய புரட்சிகர மாற்றங்களாகவும் அமைந்திருந்தது என்பர். பரிணாம வளர்ச்சிப் போக்கில் வளர்ந்து வருகிற சமூக சக்திகள், விழுமியங்கள் (Values) ஆகியவற்றிற்கும் நிலவுகிற அமைப்பு, மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கும் இடையிலான மோதல்களும் படிப்படியாக வளர்ந்து முற்றி நெருக்கடிகள் உருவாகின்றன இப்போது பழைய அமைப்பும், விழுமியங்களும் கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. அடிப்பட்ைப் பொருளாயத உறவுகட்கும் சமூக விழுமியங்கட்கு மிடையேயான உறவுகளை ஆராய்வதற்கு இது ஏற்ற சந்தர்ப்பமன்று. எனினும் தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற் பட்டு சமூக விழுமியங்கள் அவ்வக் காலத்தில் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. ஆனால் அதே சமயத்தில் சமூக விழுமியங்களும், ஒழுங்குகளும் தனி மனித செயற்பாடுகளை நிர்ணயிக்கின்றன. ஆனால் நாம் மேற்குறிப்பிட்ட வரலாற்று உருவாக்கத்தின் நெருக்கடியான புள்ளிகளில் நிலவுகிற சமூக விழுமியங்களும் தனி மனிதனின் சமூக நடவடிக்கைகளும் எதிர்எதிராகின்றன. இந்த நிலை துன்பியலுடன் மிக நெருக்கமான தொடர்புடையதாகின்றது. வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் வளர்ந்து வருகிற புதிய சக்திகள் புதிய புரட்சிகரமான விழுமியங்களின் தேவையை உணர்கின்றன. ஆனால் அவற்றைச் சமூகத் தொழிற்பாட்டுடன் இணைக்க முயலும் போது நிலவுகிற அமைப்புடன் அவை மோதநேரிடுகின்றது. இதனால் தான், “வரலாற்று ரீதியாக அவசியமான எடுகோளுக்கும் அதனை நடைமுறைப் படுத்துவதிலுள்ள சாத்தியமின்மைக்குமுள்ள மோதலே துன்பியல் என்பார் பேராசான் ஏங்கல்ஸ். (Engles, Letterto F.Lassalle). 107