பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


யாருமற்ற அனாதையான ஆலமரம் விழுத விட்டு கீழிறங்கி சரிந்து ஒடிந்து கிடக்கிறது. கோட்டைச்சுவர்களுக்குமேல் பொங்கி வளர்ந்த மரங்களின் கும்பலான இலைக்கூட்டங்களுக்குள் நூறு நூறு பறவைகள். திரேதாயுகத்துப் பறவைகள் வந்து வந்து மறைந்து போன சலம்பல்கள் கேட்கிறது. பச்சை இலைகளைப் பார்த்துப் பார்த்து கம்பிகளுக்கு இடுவலில் இருக்கும் கண்களில் ஈர ஒளி கசிகிறது. சன்ன வெளிச்சம் கம்பிகளுக்கு ஊடே பாய்ந்து கொண்டிருக்கிறது. பாதி ஒடிந்த நிலையில் விழுதுகளையே சார்ந்து சாமித்தாத்தாவைப் போல் கிழட்டு மூச்சு விட்டு நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மரம் அண்ணாந்த நிலையில் ஆழ்ந்திருக்கும். இலைகளுக்கு அடியில் பேடையின் விசிலடிப்பு. யாராலும் தீர்க்க முடியாத துக்கத்துடன் தகிக்கிறது பேடையின் அலறல். ரெண்டாம் பாகம் குருமலையில் இடி விழுந்து முதல்க்கல் உருண்டது, சாமிநாயக்கர் என்ற முரட்டுச் சமுசாரி ரூபத்தில். காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்த விதியை உடைத்துக் கொண்டு டவுனைப் பார்த்து வந்து கொண்டிருந்தார் சாமிநாயக்கர். வெயிலும் மழைகளும் உளறும் மே காத்தும் அடித்துத் திரட்டிய திரள் மாதிரி திரேகம். பசித்து வெளுத்துப் போன கருசல் தரையைப் போல் சாம்பல் ஒடிய முகம். சாவன்னாவைப் பார்த்தால் தரிசுதான் ஞாபகம் வரும். வெட்டித்தரிசு. பளாரென்று விடிய்ய கோவில்பட்டி டவுனில் தெட்சிணாமூர்த்தி தெருமுடுக்கில் நின்று கொண்டிருந்தார். அட்டுப் பிடித்த கைத்தடியை ஊன்றி பெண்டு ஒடிந்த முதுகை நிமுத்தினார். நிமுரவில்லை. தலையைச் சாய்த்துக் கொண்டு தெருவை நோட்டம் பார்த்தார், யார் வீட்டிலாவது விடிந்திருக்கிறதா என்று. அடத் தாயளி விடிஞ்ச வீட்டக்காணமே... தெருவில் எழுந்த முதல் மனிதர்கள் மாதிரி தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.