பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஷ்டத்தையும் நஷ்டத்தையுமே நினைப்பதை விட்டு மனதுக்கு சந்தோஷமானவைகளை நினைத்தால் தூக்கம் வருமா என்று நினைத்தான். கிராமம் ஞாபகத்திற்கு வந்தது. சிங்காரம் பிள்ளை வீட்டுத் திண்ணைகள் இரண்டும் பெரிய பெரிய பொட்டல் வெளிகள் போலிருக்கும். தெருவில் பாதிக்கு மேல் ஆட்களுக்கு அங்கே தான் படுக்கை. ஒரொரு திண்ணை ஒரத்திலும் அடர்ந்த வேப்ப மரங்கள் ஒவ்வொன்று. இரண்டு ஓரங்களிலும் பயிர்க்குழி போட்ட கொல்லைகள். சுவர் மறைக்காத திண்ணைகளுக்கு மூன்று பக்கமிருந்தும் பச்சைக் காற்று விடிய விடிய வீசும். சிங்காரம் பிள்ளை வீட்டிற்குள் எந்தப் பேய் பிசாசும் அண்டாது என்பார்கள். அகால நேரங்களில் முப்பது நாற்பது பேர் விடுகிற குறட்டை சப்தத்திற்கு அஞ்சாத பேய் பிசாசும் உண்டா? நடுச்சாமத்தில் கண்ணாயிரம் பிள்ளையின் படுக்கைகிடக்கும். நன்றாய்த் தூங்கிக்கொண்டிருந்த ஆள் நடுச்சாமத்தில் காணாமற் போய்விடுவார். படப்புக் கொல்லை வீட்டில் அவருக்கு வைப்பாட்டி உண்டு. பொம்பிளைகள் சாணி தெளிக்க எழுந்திருக்கு முன்பாய் திரும்பி விடுவார். வெயில் வந்து வெகு நேரம் வரை தூங்கிவிட்டுக் கடைசி ஆளாய் எழுந்து போவார். ஊரைத் தாண்டித் தொலைவில் கண்மாய். கரையடியில் உலகம்மாள் கோவில். கோவிலை ஒட்டிக் கரைமேல் ஏழெட்டு இலுப்ப மரங்கள். ஆலமரம் அரசமரம் போல் இலுப்ப மரமும் பெரிசு பெரிசாயிருக்கும். கரை ஒரு ஆள் உயரத்திலிருக்கும். கரை மேல் நின்றால் எப்படிச்சுருள்முடி உள்ள ஆளும் காற்றுக்குத் தலையைக் கலைத்துக் கொள்ள வேண்டும். இடுப்பில் கையை வைத்துக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ள வேண்டும். பல பேர் கவனப் பிசகாயிருந்து உடுத்தியிருந்த வேட்டிகளைக் காற்றுப்போகிற திசைக்குக் கொடுத்துவிட்டு உடம்பில் துணியில்லாமல் ஓடியிருக்கி றார்கள். மத்தியான வெயிலுக்கு இலுப்ப மரத்தடிகளில் துண்டுகளை விரித்துப் பல பேர் சாமங் கொண்டாடுவார்கள். அய்யனார்கோவிலைச்சுற்றி கோவைச் செடிகள் ஜாஸ்தி. ஊருணி தாண்டிக் கொஞ்சதூரம் வரை நஞ்சை, வடக்கே போகப் போகப் புஞ்சை முதலில் நெல், அப்புறம் கேப்பை கம்பு சோளம் என்று வரிசையாய்ப் பயிர் வகை பார்த்து நடந்து அய்யனார் கோவிலுக் கருகில் போனால் ஏராளமாய்க் கோவைப் பழம் பார்க்கலாம். 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/75&oldid=463981" இலிருந்து மீள்விக்கப்பட்டது