பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அதைக் கேட்டான். "அதெப்பிடி உன்னால என்னப் பார்க்கும்போது எந்த மாறுதலுமில்லாம இருக்க முடியுது. நீ நிச்சயமாய் வருவன்னு தெரிஞ்சிருந்தாலும் உன்ன பார்த்த வினாடி மனசு 'பக்பக்"ன்னு அடிக்குது. முகமே மாறிப் போகுது. நீ மட்டும் எப்படி சின்ன சந்தோஷத்தையோ ஆச்சரியத்தையோ கூட காட்டாம இருக்க?" அவள் மெல்லிய குரலில் தலைகுனிந்து சொன்னாள்: "என் மனசுல நீங்க எப்பவும் எங்கூட இருக்கறதாவே நினைப்பு. சாப்பிடும் போது என்னோட தட்டிலியே நீங்களும் சாப்பிடறிங்க. காலேஜ்ல என் பக்கத்தில நீங்கதான் உட்கார்ந்திருக்கீங்க. கடைக்கு, கோவிலுக்கு, சினிமாவுக்கு எங்க போனாலும் நீங்ககூடவே வlங்க. தூங்கும் போது பக்கத்தில உட்கார்ந்து என்னையே பார்த்துக்கிட்டிருக்கீங்க. அதனால உங்களப் பார்க்கும்போது எனக்கு எந்த மாறுதலும் தெரியறதில்லை' அவன் அன்றிரவு தூங்கவில்லை. ஆனால் அன்றைக்கும், இன்றைக்கும் எவ்வளவு வித்தியாசம். - அவன், அவள் வீட்டை இப்போது நெருங்கியிருந்தான். அவள் அறையை உற்றுப்பார்த்தான் ஜன்னல் சாத்தியிருந்தது. அவனால் மேலே நடக்க முடியவில்லை. வாசலில் மங்கலாய்த் தெரிந்த கோலத்தைப் பார்த்தான். அவள்தான் போட்டிருப்பாள். அவள் மனதைப்போலவே நிறைய வளைவும் நெளிவும் உள்ள, ஆனால் அழகிய கோலம். மூங்கில் வேலிக்குள்ளிருந்து பன்னீர்ப் புஷ்பங்கள் சொரிந்திருந்தது. அவள் பாதங்களுக்கு இயற்கை தேவதை செய்திருக்கும் புஷ்பாராதனை. அவன் குனிந்து ஒரே ஒரு பூவை எடுத்துச் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான். அவனுக்குச் சட்டென்று அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அவனுக்கு மல்லிகைப்பூ என்றால் ரொம்ப பிடிக்கும். மல்லிகை வைத்திருக்கும் எல்லாப் பெண்களுமே அழகாயிருப்பதாய்ப் படும். அதற்காகவே அவள் அடிக்கடி மல்லிகை வைத்துக் கொள்வாள். ஆனால் அவர்கள் பொதுவாக கல்லூரி முடிந்தபின்தான் தனியாக சந்திக்க முடியும். அப்போது பூ வாடியிருக்கும். அதனால் அதை அகற்றியிருப்பாள். அவனுக்கு ரொம்ப நாளாக ஆசை. அவள் கூந்தல் மல்லிகையிலிருந்து வரும் வாசத்தை முகர்ந்தபடி அவளுடன் நடக்க வேண்டும். அவனுக்காக எப்படியோ ஒரு நாள் மாலையில் புத்தம் புதுப் பூச் சூடிவந்தாள். மணலில் உட்கார்ந்தவுடன் அவள் தலையிலிருந்து பூப்பறித்தான். அது இதழ் உதிர்ந்து, கசங்கி கையில் கிடைத்தபோது ஏக்கத்துடன் அதைப்பார்த்தான். அவள் சிரித்தபடி 9]