பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வாக்-மென்'ல் பாட்டுக் கேட்டான். 'மலரே மலரே தெரியாதோ, மனதின் நிலைமை புரியாதோ, எனை நீ அறிவாய், உனை நான் அறிவேன்'. அவளுக்கு மிகவும்பிடித்த பாட்டு. அடிக்கடி பாடுவாள். நினைத்தாற் போலிருந்து பாடுவாள். தனிமை சுதந்தரத்தில் அவன் தோளில் சாய்ந்துபாடுவாள். ஏன் இவ்வளவு தாமதம்? என்று கேட்கும்போது பாடுவாள். சந்தோஷமாய் இருக்கும்போது பாடுவாள். வருத்தமாயிருக்கும் போதும் அதே பாட்டு. பாடிப்பாடியே உருக்கினாள். உருகினாள். இதோஇங்கேயே ஒருநாள் பாடியிருக்கிறாள். இப்போது எங்கே போயிற்று 'உன்னைநான் அறிவேன் என்றுலயித்துப் பாடிய பாடலின் அர்த்தம், அவனால் அதற்குமேல் அங்கிருக்க முடியவில்லை. அவன் வீடு நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினான். சாலையில் எதிர்வந்த பெண்கள் எல்லோரும் அவனைக் கடக்கும் வரை பார்த்தார்கள். இது அவனுக்கு சகஜமாயிருந்தது. எல்லாப் பெண்களும் அவனை அன்புடன் பார்க்கிறார்கள். அவனிடம் ஏதோ ஒன்று அவர்களை ஈர்க்கிறது. எனவே தங்கள் கண்ணில் ஆதரவு காட்டுகிறார்கள். சோகமான கண்களுக்கு பெண்கள் அடிமை போலும். தான் இப்போதெல்லாம் நிதானப் பட்டிருப்பதை அவன் உணர்ந்தான். 'பைக் மெதுவாகத்தான் ஓடுகிறது. குரல் தாழ்ந்து தான் வருகிறது. ஸ்டீரியோ சப்தம் பிடிக்கவில்லை. தனக்காக மட்டும் காதில் ரகசியமாய் இசைக்கும் வாக்-மென் பிடிக்கிறது. கல்லூரியில் ஆர்ப்பாட்டம் இல்லை, அமர்க்களம் இல்லை. அமைதி எவ்வளவு ஆழமானது. எல்லோரும் சொல்வது போல் அவன் நிரம்ப மாறி யிருந்தான். ஆனால் இந்த மாறுதல்கூட மகிழ்ச்சிதான். சோகத்திலும் ஒரு சுகமிருக்கிறது. உண்மையில் இது சோகமா? சுகமா? சமயங் களில் அவனுக்கு தான் மீண்டும் அவளுடன் இணைய வேண்டுமா என்று கூடத் தோன்றியது. இந்த அடிமன வாழ்வு அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது. தனக்கென ஒரு தனி உலகம், தனிவாழ்வு. காதல் தோல்வி உண்மையில் சாபமா? வரமா? ஒரு நாள் வழக்கம்போல் தன் தனிமையுலகில் சஞ்சரித்துவிட்டு தாமதமாய் வீடு திரும்பினான். பசியில்லை என்று சொல்லி தன்னறைக்குப் போனான். மேஜையின் மீது அவனுக்கு வந்திருந்த கடிதம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அசுவாரசியமாய் கையிலெடுத்தான். திடீரென இதயத்துள் பத்திருபது அரேபியக் குதிரைகள் தடதட வெனப் பாய்ந்தோடியது. அவள் கையெழுத்து. 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/95&oldid=464001" இலிருந்து மீள்விக்கப்பட்டது