பக்கம்:சுயம்வரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சுயம்வரம்



"அது எப்படித் தெரிந்தது, உங்களுக்கு?"

'அவனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கெல்லாம் அது தெரியுமே ஆடம்பர வாழ்வின்மேல் கொண்ட மோகத்துக்காகத் தன் ஆன்மாவையே கொல்லாமல் கொன்றுகொண்டுவிட்ட அவனிடம் பணம் உண்டு; செல்வாக்கு உண்டு; அதற்கேற்ற செருக்கும் உண்டு. ஆனால் ஒன்றே ஒன்றுதான் அவனிடம் இல்லை!"

'அது என்ன?”

"வேறென்ன, உதட்டோடு நிற்காமல் உள்ளத்திலும் தனக்கு இடம் கொடுத்தோரையெல்லாம் சதா துன்பத்துக் குள்ளாக்கிக் கொண்டிருக்கிறதே அன்பு என்ற ஒன்று, அதுதான் அது!”

'அப்படிப்பட்ட மனிதரை நீங்கள் ஏன் இன்னும் உங்கள் நண்பராகக் கொண்டிருக்க வேண்டுமாம்?"

'அதற்கும் அன்புதான் காரணம், மதன் இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அவன் திருந்துவான் என்று நான் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறேன்; அந்த நம்பிக்கையினாலேயே இன்னும் நான் அவனுக்கு நண்பனா யிருக்கிறேன்!” என்றான் அவன், எங்கேயோ எட்டாத தூரத்தில் தன் பார்வையைச் செலுத்தி.

மதனா அவனை ஏற இறங்கப் பார்த்தாள்; பார்த்து விட்டுப் பெருமூச்சுடன் சொன்னாள்:

“என்ன இருந்தாலும் நீங்கள் அவ்வளவு நல்லவரா யிருக்கக் கூடாது; உங்களுக்கே அது நல்லதும் அல்ல."

இதைச் சொன்னபோது அவள் கண்களில் ஏனோ நீர் துளிர்த்தது; அதை அவனுக்குத் தெரியாமல் அவள் துடைத்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/105&oldid=1384750" இலிருந்து மீள்விக்கப்பட்டது