பக்கம்:சுயம்வரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

103



அதே சமயத்தில் அவளுக்கு அருகே இருந்த அருணாவும் திரும்பித் தன் கண்களைத் துடைக்கவே, ‘என்ன அருணா, என்ன?’ என்றான் மாதவன், சற்றே பதட்டத்துடன்.

அவன் இப்படிக் கேட்டானோ இல்லையோ, “ஒன்றுமில்லை. இனிமேல் நீங்கள் இங்கே வரவேண்டாம்; வந்தாலும் எனக்கு எதிர்த்தாற்போல் நிற்க வேண்டாம்; நின்றாலும் இப்பொழுது பேசியதுபோல் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்று தயவு செய்து பேச வேண்டாம்!" என்று அவள் அழுகையும் ஆத்திரமுமாகப் பொரிந்து தள்ளிக் கொண்டே தன் அலுவலகத்தை நோக்கி விறுவிறு'வென்று நடந்தாள்.

அவள் தலை மறைந்ததும், 'என்ன அவளுக்குத் திடீரென்று?’ என்றாள் மதனா, ஒன்றும் புரியாமல்.

“தெரியவில்லையா, அவளும் என்னைக்காதலிக்கிறாள்' என்றான் மாதவன்.

அவள் சிரித்தாள்; 'ஏன் சிரிக்கிறாய்?" என்றான் அவன்.

“என்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லையா, நீங்கள்?' என்றாள் அவள்.

'மனைவியிடம் கணவன் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை' என்றான் அவன்.

'சரி, போய் வாருங்கள்!' என்றாள் அவள்.

'அருணாவைக் கோபித்துக் கொள்ளாதே அவளையும் நான் வெறுக்கவில்லை என்று நீயே அவளிடம் சொல். அந்த அளவுக்கு வேண்டிய மனப் பக்குவத்தை ஆண்டவன் உனக்கு அருளட்டும். நாளைக் காலை நான் உன்னை அழைத்துக் கொண்டு போக இங்கே வருகிறேன்; தயாராயிரு' என்று அவன் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/106&oldid=1384760" இலிருந்து மீள்விக்கப்பட்டது