பக்கம்:சுயம்வரம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

105



'“ஏன் வந்தேனா? இந்தக் 'கலியான அழைப்பிதழ் இருக்கிறதே, இதுதான் உங்களுக்குப் பின்னால் என்னை வரச் சொல்லிற்று!”" என்று தன்னிடம் இருந்த அழைப்பிதழைக் காட்டினாள் அவள். அதில் பின்வருமாறு அச்சிடப்பட்டிருந்தது:

அன்புடையீர் வணக்கம்.

5 - 1 - 73 அன்று காலை 10 மணி அளவில் சென்னையை அடுத்துள்ள திருநீர்மலையில் உள்ள பச்சை வண்ணப் பெருமாள் கோயிலில் செல்வி மதனாவை நான் மணக்க விருப்பதால், தாங்கள் அருள் கூர்ந்து வந்து எங்களை வாழ்த்தி அருள வேண்டுகிறேன்.

தங்கள்,

மாதவன்.


இதைத்தவிர அந்த அழைப்பிதழில் பெண்ணைப் பெற்றவரின் பெயரோ, பிள்ளையைப் பெற்றவரின் பெயரோ காணப்படவில்லை. இடையே பெரியோர் நிச்சயித்த வண்ணம் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு வந்து நிற்பார்களே சில பெரியவர்கள், அவர்களையும் காணவில்லை.

இதெல்லாம் ஒன்றுமில்லாமல், இன்ன தேதியில், இன்ன இடத்தில் நான் மதனாவை கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்; உங்களுக்கு விருப்பமிருந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் போங்கள் என்பதுபோல் இருந்த அந்த அழைப்பிதழை முதல் நாள் இரவு தன் அத்தையின் வீட்டில் எதேச்சையாகக் கண்டெடுத்த நீலாவுக்கு, ஆச்சரியமாவது ஆச்சரியம், ஒரே ஆச்சரியம்!

“'இப்படியும் ஒரு கலியாணம் நடந்திருக்குமா?”’ என்று அவள் முதலில் நினைத்தாள்; பிறகு, 'ஏன் நடக்காது, இந்தப் பட்டணத்தில் எல்லாம் நடக்கும்' என்றும் அவள் நினைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/108&oldid=1384776" இலிருந்து மீள்விக்கப்பட்டது