பக்கம்:சுயம்வரம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சுயம்வரம்



நினைத்துக்கொண்டு தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டது இது:

அதாவது, அவளுக்கு உலகம் தெரிந்த நாளிலேயே அவள் கணவன் அவளுடைய அத்தான் தான் என்று அவள் பெற்றோர் அவளுக்குச் சொல்லிவிட்டார்களாம்; அன்றிலிருந்தே அவன் தான் தன் மணாளன் என்று அவளும் தன் மனத்தில் அவனை வரித்துக்கொண்டு விட்டாளாம். ஆக, மதனா அவனை மணப்பதற்கு முன்னாலேயே அவள் அவனை மானசீகமாக மணந்துகொண்டு விட்டாளாம்!...

அதற்குமேல் இனி என்ன?’ என்று யோசிக்க அவளுக்கு என்ன இருக்கிறது?

“ஒன்றும் இல்லை என்று நினைத்த அவள், உண்மையிலேயே அதைப் பற்றி ஒன்றும் யோசிக்காமலே இருந்து விட்டாள் ”

ஆனால் அவனுக்கோ, 'இனி என்ன?’ என்ற பிரச்னை இப்போதுதான் ஆரம்பாகியிருந்தது. அதிலிருந்து தப்ப வழி என்ன என்று தெரியாமல் அவன் விழித்தான்; தவித்தான்.

அவனுடைய போதாத காலம், அவன் பெற்றோர் குட்டை உடைப்பதற்கு முன்னால், அந்தச் சனியன் பிடித்த அழைப்பிதழ் அவளுக்குக் கிடைப்பானேன்? அதை எடுத்துக் கொண்டு வந்து அவள் தன்னை இப்படி மடக்குவானேன்?

ஒன்றும் புரியவில்லை அவனுக்கு, "இந்த அழைப்பிதழை நீ உன் அப்பாவிடம் காட்டினாயா?" என்றான் மெல்ல.

'இல்லை' என்று சொல்லவில்லை அவள்; "உங்களைக் கேட்காமல் காட்டுவேனா?” என்றாள், அந்தப் பழைய காலப் "பதிவிரதா தருமத்தை அப்படியே அனுசரித்து.

அதுதான் அவன் உள்ளத்தை எப்படிச் சுட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/111&oldid=1384876" இலிருந்து மீள்விக்கப்பட்டது