பக்கம்:சுயம்வரம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சுயம்வரம்

"பேசியிருந்தால் ஒரு வேளை நான் 'மதனாவைக் காதலிக்காமல் இருந்திருக்கக் கூடும்."

"இங்கெல்லாம் காதலுக்கு அடிப்படை வெறும் பேச்சுத்தானா?"

"இல்லை. என்னைப் பொறுத்தவரை முதலில் உருவம்; அப்புறம் உள்ளம்."

"அந்த இரண்டும் என்னிடமும் இருப்பதாக இப்போதாவது தெரிகிறதா உங்களுக்கு?"

"தெரிகிறது."

"நல்ல வேளை, பிழைத்தேன்!"

"ஏன், எதற்காக?"

"உங்களுக்காக நானும் அதோ நிற்கிறாளே, அந்தப் பெண்ணைப்போல 'பிளவு'ஸைக் கொஞ்சம் மேலே தூக்கி, 'ஸாரி'யைக் கொஞ்சம் கீழே இறக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கு இப்போது அவசியமில்லை என்று தோன்றுகிறது!" என்றாள் அவள், சற்றுத் தூரத்தில் அடி வயிற்றையும் முதுகையும் காட்டியபடி நின்றுகொண்டிருந்த ஒரு 'மினி முன்றானை'யைச் சுட்டிக்காட்டி.

"ஐயோ, வேண்டாம்! பெண்கள் தங்களுடைய ஆடை அணிகளால் ஆண்களுக்குச் சாந்தியைத்தான் அளிக்க வேண்டுமே தவிர, வெறியை ஊட்டக் கூடாது. அது அவர்களுக்கும் நல்லதல்ல; சமூகத்துக்கும் நல்லதல்ல."

"அப்படியானால் உங்கள் கண் மட்டும் அல்ல, எண்ணமும் இன்னும் அழகாய்த்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால்..."

"என்ன ஆனால்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/129&oldid=1384837" இலிருந்து மீள்விக்கப்பட்டது