பக்கம்:சுயம்வரம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சுயம்வரம்


விட்டது எனக்கு, அந்தத் தந்தியை யார் அடித்திருப்பார்கள் என்று!" என்றாள்.

"எனக்கும்தான் அதைக் கொஞ்சம் சொல்லேன்?" என்றார் சம்பந்தம்.

"பகவான்தான் அடித்திருக்கிறார்! இல்லாவிட்டால் இவர்கள் இருவரையும் இப்படிச் சேர்ந்தாற்போல் பார்க்கும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்குமா?" என்றாள் அவள்.

"இப்போதுதான் அது என் ஞாபகத்துக்கு வருகிறது; அந்தத் தந்தியின் அடியில் 'பகவான்' என்றுதான் குறிப்பிட்டிருந்தது!" என்றார் அவர்.

தன் பெற்றோரின் திடீர்ப் பிரவேசத்தைக் கண்டு ஏற்கெனவே திகைப்படைந்திருந்த மாதவன், அவர்கள் 'தந்தி, கிந்தி' என்றதும் மேலும் திகைப்படைந்து, "எந்தத் தந்தியைப் பற்றி சொல்கிறீர்கள், அப்பா?" என்றான் குழப்பத்துடன்.

"விபத்துக்குள்ளானவனே இப்படிக் கேட்டால் நாங்கள் என்னடா சொல்வது?" என்றார் அவர், சிரித்துக்கொண்டே.

"விபத்தா, யாருக்கு?"

"உனக்குத்தான்! அது உனக்கே தெரியாதா? நேற்றிரவு நீ ஏதோ ஒரு ஸ்கூட்டர் விபத்தில் சிக்கிக் கொண்டாயாம்; உன்னைக் கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் போட்டு வைத்திருக்கிறார்களாம்; எங்களை உடனே புறப்பட்டு வரும் படி உன் நண்பன் 'பகவான்' தந்தி அடித்திருந்தானே?"

"பகவானா! என்னுடைய நண்பனா? யார் அப்பா, அவன்?"

"யாருக்குத் தெரியும், பகவானுக்குத்தான் தெரியும்!"

"தெரிந்திருந்தால் அவனுக்குத்தான் தெரிந்திருக்க வேண்டும், அப்பா! எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/133&oldid=1384848" இலிருந்து மீள்விக்கப்பட்டது