பக்கம்:சுயம்வரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

131


நீங்கள் அந்தத் தந்தியைப் பார்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறீர்களா?"

"இல்லாவிட்டால் ஏன் வருகிறோம்? நாங்கள்தான் 'சட்டி சுட்டதடா, கை விட்டதடா!' என்று போய் விட்டோமே!"

இந்தச் சமயத்தில் சாரதாம்பாள் குறுக்கிட்டு, "என்ன இருந்தாலும் நீ அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுடா! அதில் எனக்கும் உன் அப்பாவுக்கும் எவ்வளவு வருத்தம் தெரியுமா?" என்றாள்.

"இருக்கலாம் அம்மா, இதுவரை எத்தனை தவறுகள் செய்திருப்பேன் நான்! அதையெல்லாம் மன்னித்த நீங்கள் இதையும் மன்னித்திருக்கக் கூடாதா?"

"இனி மன்னிக்காமல் என்ன செய்வது? நாங்கள் நினைத்தது வேறு, நடந்தது வேறு என்று ஆகிவிட்டது. அதற்கும் அந்த பகவான்தான் காரணமோ, என்னவோ?" என்றார் சம்பந்தம்.

அதுவரை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த மாமி, "என்ன விஷயம் அது?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

அவள் அப்படிக் கேட்டதுதான் தாமதம், மாதவன் முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு எழுந்து வெளியே நடந்தான்.

'யார் அடித்திருப்பார்கள் அந்தத் தந்தியை?'

'யார் அடித்திருப்பார்கள் அந்தத் தந்தியை?'...

வீட்டை விட்டு வெளியே வந்த மாதவனின் உள்ளத்தில் இந்தக் கேள்விதான் அடுத்தடுத்து எழுந்து கொண்டிருந்தது. அதற்குரிய பதிலும் அவனுக்குக் கிடைக்காமற் போகவில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/134&oldid=1384851" இலிருந்து மீள்விக்கப்பட்டது