பக்கம்:சுயம்வரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

சுயம்வரம்


கிடைத்தது. ஆனாலும் 'அப்படியும் இருக்குமா?' என்று ஒரு சந்தேகம்; 'ஏன் இருக்காது?' என்று அதைத் தொடர்ந்து ஒரு சமாதானம் - இப்படியாக அவன் தன் கால் போன போக்கில் நடந்துகொண்டிருந்தபோது, "வாழ்த்துக்கள்!" என்று சொல்லிக் கொண்டே வந்து அவன் கையைப் பிடித்துக் 'குலுக்கு, குலுக்கு' என்று குலுக்கினான் 'அப்கோர்ஸ் ஆனந்தன்.'

அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "எதற்கு?" என்றான் மாதவன்.

"இன்றிரவோடு உன்னைப் பிடித்த தலைவலி விடுகிறதாமே!"

"எந்தத் தலைவலி?"

"அதுதான், உன்னுடைய 'மாமா பட்டாள'த்தைச் சொல்கிறேன்! அவர்கள் இன்றிரவு ஊருக்குப் போய் விடுகிறார்களாமே? அதைக் கேட்க உனக்கு எப்படி இருந்ததோ என்னவோ, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பாவம், மதனா! உனக்காகத் தன்னைப் பெற்று வளர்த்தவர்களைக் கூட உதறி எறிந்துவிட்டு வந்து..."

அவன் முடிக்கவில்லை ; "ச்சூச்சூ!" என்று 'சூ' கொட்டிக்கொண்டே தன் கைக்குட்டையை எடுத்து அவன் கண்களைத் துடைத்தான் மாதவன்.

இப்போது ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை; தான் சொல்ல வந்ததை மேலே சொல்லாமல் நிறுத்திக் கொண்டு, "என்னடா, விளையாடுகிறாயா?" என்றான் வழக்கம்போல் அவன் தோளைத் தட்டி.

அவ்வளவுதான்; "ஆமாம், உனக்கு வாழ்க்கையே விளையாட்டாக இருக்கும்போது, உன்னைப் போன்றவர்களை உதைப்பதே எனக்கு ஏன் விளையாட்டாக இருக்கக்கூடாது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/135&oldid=1384854" இலிருந்து மீள்விக்கப்பட்டது