பக்கம்:சுயம்வரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

133


என்று கேட்டுக்கொண்டே மாதவன் தன் முஷ்டியை உயர்த்தி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி, காலால் அவனை எட்டி ஓர் உதை உதைத்தான். அவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் தள்ளாடிக் கீழே விழப்போன சமயம் அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தி, "தெருவில் வெறி பிடித்த நாயை அடித்துப் போடுவதுபோல் அடித்துப் போடவேண்டுமடா, உன்னை!" என்று உறுமிய படி, அவனை அடி மேல் அடித்து, ஒரு புரட்டுப் புரட்டி எடுத்தான் மாதவன்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் ஒரு கணம் நிலை குலைந்து போன ஆனந்தன், மறுகணம் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஆசை மதனாவை அழைத்துக்கொண்டு போய் நாளை நீ தொடங்கவிருக்கும் புது வாழ்வுக்கு நல்வாழ்த்துக் கூற வந்த எனக்கு நீ செலுத்தும் நன்றியா இது!" என்று அப்போதும் அவனுக்குக் கை கொடுக்கப் பார்த்தான்.

"நல்வாழ்த்துக் கூற வந்த வஞ்சக நரியே யார் அடித்தது அந்தத் தந்தியை? அதைச் சொல், முதலில்!" என்று அவன் கழுத்தைப் பிடித்து அப்படியே ஒரு தூக்குத் தூக்கிப் போட்டு, ஓர் உலுக்கு உலுக்கினான் மாதவன்.

"எந்தத் தந்தியை?" என்றான் அவன், அந்த நிலையிலும் ஏதும் அறியாதவனைப் போல.

"இன்னுமா நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்? எனக்கு ஏதோ ஸ்கூட்டர் விபத்தென்றும், என்னைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் போட்டிருக்கிறார்களென்றும் என் தந்தைக்கு தந்தியடித்த 'பகவான்' நீதானே?"

இதைக் கேட்டவுடன் தன்னையும் அறியாமல் 'திரு திரு'வென்று விழிக்க ஆரம்பித்துவிட்ட தன் கண்களை மறைக்க முடியாமல், "யார் சொன்னது, அருணா சொன்னாளா?" என்றான் அவன் ஆத்திரத்துடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/136&oldid=1384857" இலிருந்து மீள்விக்கப்பட்டது