பக்கம்:சுயம்வரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

141


வயதுவரைதான் இஷ்டம்போல் வாழ அனுமதிக்கிறது; அதற்குப் பின் அதுவே அவனை அப்படியெல்லாம் வாழ விடாமல் தடுத்து விடுகிறது. அதாவது, ஒழுக்கத்தைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லாமல் செய்துவிடுகிறது. இந்த லட்சணத்தில் அதையெல்லாம் தடுக்கச் சட்டங்கள் ஏன், சாஸ்திரங்கள் ஏன் என்பதுதான் என் கேள்வி!"

"சரி, அந்தக் கிளப்பின் தலைவர் யார் என்றாவது நான் தெரிந்துகொள்ளலாமா?"

"பேஷாய்த் தெரிந்து கொள்ளலாம். மாஜி நீதிபதி சத்தியநாதன்தான் அதன் தலைவர்; அவருடைய காரியதரிசி நான்!"

"உங்கள் தலைவருக்கு இப்போது என்ன வயதிருக்கும்?"

"கிட்டத்தட்ட அறுபது இருக்கும். அதனால் என்ன, அவருடைய ஆசைக்கு இன்னும் அவ்வளவு வயது ஆகிவிடவில்லை. அத்துடன்..."

"என்ன?"

"இந்தப் பணம் இருக்கிறதே, பணம் - அது அங்கே குவிவதுபோல வேறு எங்குமே குவிவதில்லை!"

"அதனால்தான் உங்களுடைய இஷ்டத்துக்கு நீங்கள் விளையாடிக்கொண்டிருக்கிறீர்களா?"

"இல்லாவிட்டால் எனக்குக் கிடைக்கும் சுண்டைக்காய் சம்பளத்தில் என்ன செய்ய முடியும், நான்? சிகரெட் செலவுக்குக்கூடக் காணாதே அது!"

"அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் அந்த வேலையை இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள்?"

அவன் சிரித்தான்; "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/144&oldid=1384878" இலிருந்து மீள்விக்கப்பட்டது