பக்கம்:சுயம்வரம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

145

"சரிதான், போடா!" என்று அவன் பிடியிலிருந்து தன் கால்களை விடுவித்துக்கொண்ட அவர், அந்தச் சமயம் பார்த்து அங்கே காலியாக வந்த ஒரு டாக்சியை நிறுத்தி, "ம், ஏறுங்கள்!" என்று தன் மகளையும் மனைவியையும் பின் சீட்டில் ஏற்றிவிட்டு, தான் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டு, "போ, எழும்பூருக்கு!" என்றார்.

டாக்சி பறந்தது. நீர் மல்கும் கண்களுடன் அதையே பார்த்துக்கொண்டு நின்ற மாதவனுக்கு பின்னால் வந்து நின்ற அவன் அப்பா, "எதையும் செய்வதற்கு முன்னால் யோசிக்காமல் செய்த பின்னால் யோசித்து என்ன பிரயோசனம்? ஆனது ஆச்சு, போனது போச்சு; மாமாவுக்குப் பயந்து அந்த மதனாவைக் கொண்டுபோய் எங்கே வைத்திருக்கிறாயோ என்னவோ, இப்போதே போய் அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடு!" என்றார்.

"ஆமாம், பெண் பாவம் பொல்லாதது. அந்தப் பாவத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டுமா, என்ன? போய், அவளை இப்போதே அழைத்துக் கொண்டு வந்து விடு!" என்றாள் அம்மாவும் அவருடன் சேர்ந்து.

மாதவன் மௌனமாகத் திரும்பி, அவர்கள் இருவருடைய பாதங்களையும் தொட்டு வணங்கிவிட்டு நடந்தான்.

அங்கே....

அருணாவையும் மதனாவையும் ஏற்றிக்கொண்டு அப்போதுதான் ஒரு டாக்சி கிளம்பிக் கொண்டிருந்தது.

'இந்த நேரத்தில் இவர்கள் எங்கே போகிறார்கள்?'...

அதற்கு மேல் யோசிக்கவில்லை அவன்; "மதனா! மதனா!" என்று கூவி அவளை அழைத்தபடி, "ஓல்டான், ஓல்டான்" என்றான் கையைத் தட்டு தட்டென்று தட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/148&oldid=1384889" இலிருந்து மீள்விக்கப்பட்டது