பக்கம்:சுயம்வரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சுயம்வரம்

இருட்டிலிருந்து கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்தால் தேவலை!” என்றான், தன்னைச் சுற்றியிருந்த இருட்டினை ஊடுருவிப் பார்த்துக்கொண்டே.

அந்த மர்ம உருவமோ, அவன் சொன்னபடி வெளிச்சத்துக்கு வராமல், “நான்தான்!” என்றது இருட்டிலேயே நின்றது நின்றபடி.

“நான்தான் என்றால்...?” என்றான் அவன், ஒன்றும் புரியாமல்.

“குரலிலிருந்து கூடவா என்னைத் தெரியவில்லை, உங்களுக்கு? நான்தான் அருணா!” என்றது அந்த உருவம் சற்றே வெட்கத்துடன்.

“ஒ, அருணாவா! கையைத் தட்டியதற்குப் பதிலாக என் முதுகைத் தட்டியிருக்கலாமே, நீங்கள்?”

“ஊஹூம், நான் மாட்டேன்”

“ஏன், ஷாக் அடிக்குமா?”

அவள் ஒரு “மினிமம் சிரிப்பு”ச் சிரித்தாள்; அவனும் ஒரு ‘மினிமம் சிரிப்பு’ச் சிரித்தான்.

‘யார் இந்த அருணாவும் ஆனந்தனும்?’ என்கிறீர்களா? வேறு யாருமில்லை; நேற்று வரை மதனாவுக்கும் மாதவனுக்கும் ‘நண்பி - நண்ப’னாயிருந்து, இன்று ‘வில்லி - வில்ல’னாகி விட்டவர்கள்தான் இவர்கள்

காரணம்?...

எல்லாரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களாதலால் மாதவனுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆனந்தனும் மதனாவின் மேல் ‘ஒரு கண்’ வைத்திருந்தான்; அதே மாதிரி, மதனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு அருணாவும் மாதவனின்மேல் ‘ஒரு கண்’ வைத்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/17&oldid=1384850" இலிருந்து மீள்விக்கப்பட்டது