பக்கம்:சுயம்வரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

25


'என்னடா, நமக்கு மாப்பிள்ளை தேடும் கஷ்டத்தை வைக்காமல் நம் பெண்ணே ஒரு பையனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து நிற்கிறாளே, அவனும் 'பெண் பார்க்க' வேண்டாம், 'பிசினஸ்' பேச வேண்டாம். 'எடு தாலியை, நீட்டு கழுத்தை!' என்று ஒற்றைக் காலில் நிற்கிறானே, கட்டட்டும், தாராளமாய்க் கட்டட்டும்!' என்று விட்டார்களா? அதுவும் இல்லை. எங்கே பார்த்தாலும். 'உரிமைப் போராட்டம்' நடக்கும் இந்தக் காலத்தில் அவர்களும் 'தாய், தந்தை' என்ற முறையில் தங்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காக 'எங்கள் முகத்தில் விழிக்காதே, இனி இந்த வீட்டு வாசற்படியை மிதிக்காதோ என்று ஓர் 'ஊசிப்போன போராட்டத்தை நடத்தி முடித்து விட்டார்கள். நல்ல வேளையாக நம் காதல் பதினெட்டு வயதுக்குமேல் 2.தயமானதால், அதற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று. இப்போது சிலர் எண்ணிப் பதினாறு முடியுமுன்பே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்களே, அந்த மாதிரி நாமும் காதலிக்க ஆரம்பித்திருந்தால் நம் கதி என்ன ஆகியிருக்கும்? நம்முடைய காதலின் கதிதான் என்ன ஆகியிருக்கும்?...

போகட்டும், போ! எப்படியோ நாம் பிழைத்தோம்; நம்முடைய காதலும் பிழைத்தது!

ஒன்று செய்யேன், பொழுது விடிந்ததும் நீ நிஜமாகவே 'காதற் கிளி'யாக மாறி, எழும்பூரில் உள்ள 'பெண்கள் விடுதி'க்குச் சிறகடித்துப் பறந்துவிடேன்! அங்கேதான் உன் தோழி அருணா இருக்கிறாளே, அவள் உன்னைக் கவனித்துக் கொள்ள மாட்டாளா? நான் மாமாவுக்கு 'டிமிக்கி' கொடுத்து விட்டு அங்கே வந்து....

ஓ! ஆண் வாடையே வீசக் கூடாதா அங்கே? அதனாலென்ன, அங்கிருந்து நீ அப்படியே ஆபீசுக்கு வந்துவிடேன்!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/28&oldid=1384918" இலிருந்து மீள்விக்கப்பட்டது