பக்கம்:சுயம்வரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சுயம்வரம்


அது எப்படி முடியும்? ஆபீசுக்கும் ஒரு வாரம் லீவு அல்லவா போட்டுத் தொலைத்திருக்கிறோம், 'தேன் நிலவு'க்காக? அதுதான் இப்போது 'தேள் நில'வாகப் போய் விட்டதே, என்ன செய்யலாம்?...

எதற்கும் நாளை மாலை வரை நீ அந்த விடுதியிலேயே இரு; நான் ஐந்து மணி வாக்கில் அந்தப் பக்கம் வந்து உனக்காக 'டா'வடித்துக் கொண்டு நிற்கிறேன். இருவரும் கடற்கரைக்கோ , அல்லது ஏதாவது ஒரு 'தலைவலிப் பட'த்துக்கோ போவோம். அங்கு மேலே என்ன செய்வது என்பது பற்றி நாம் ஒரு முடிவுக்கு வருவோம். என்ன, சரிதானே?...

இடையில் வெளியே வரவேண்டுமென்றால் நீ இருக்கும் அறைக்கு நடைப் பக்கம் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியே பதுங்கிப் பதுங்கி நீ வெளியே வந்து போகலாம். அதற்காகவே நான் அந்தக் கதவுக்கு மட்டும் பூட்டுப் போடாமல் விட்டு வைத்திருக்கிறேன்.

மற்றவை நாளை மாலை நேரில்...

இங்ஙனம்,

கழுத்துக்கு எட்டியும்
கைக்கு எட்டாத உன் கணவன்,

மாதவன்

கடிதத்தைப் படித்து முடித்ததும் ஒரு 'டெகா மீட்டர்' அளவுக்குப் பெருமூச்சு விட்டாள் மதனா. அனலாய் வெளிவந்த அந்தப் பெருமூச்சு மாமா மகாலிங்கத்தின் மேல் பட்டிருந்தால் அவர் 'யார்ட்லி பவுட'ராகப் போயிருப்பார்! நல்ல வேளை, அவர் அந்த அறைக்கு வெளியே சீட்டாடிக் கொண்டிருந்ததால் பிழைத்தார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/29&oldid=1384921" இலிருந்து மீள்விக்கப்பட்டது