பக்கம்:சுயம்வரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

31


மதனா முடிக்கவில்லை; "விடலாம்தான் என்னிடம் 'கிளிஸரைன்' இல்லையே? அதற்காக வெங்காயத்தையாவது நறுக்கித் தொலையலாமென்றால் இது வீடும் இல்லை; விடுதி. என்னை என்னடி செய்யச் சொல்கிறாய்? எனக்கோ அவையிரண்டும் இல்லாமல் ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வராது!" என்றாள் அவள்.

"ஆபத்தில் உதவுவான் நண்பன் என்று அந்த நாளில் சொன்னதெல்லாம்..."

"நண்பன்தானே உதவுவான் என்று சொன்னார்கள்? 'நண்பி உதவுவாள்' என்று சொல்லவில்லையே!"

"அப்படியானால்..."

"நான் போகிறேன் என்கிறாயா? போ, தாராளமாகப் போ!"

அவ்வளவுதான்; கண்ணில் நீர் ததும்ப, வந்த வழியே திரும்பினாள் மதனா. 'ஓகோகோ' என்று சிரித்தபடி அருணா அவள் தோள்களை இறுகப் பற்றி, "அதற்குள் ஏமாந்து விட்டாயா? இப்படித்தாண்டி, நீ அந்த மாதவனிடமும் ஏமாந்து விட்டாய்!" என்று சொல்லிக்கொண்டே அவளை அப்படியே ஒரு திருப்புத் திருப்பி, அங்கிருந்த கட்டிலின் மேல் உட்கார வைத்தாள். அவள் கண்களில் ததும்பிய நீரைத் தன் முன்றானையால் மெல்ல ஒத்தி எடுத்துவிட்டு, அவளுடைய கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கட்டிலுக்கு அடியில் வைத்துவிட்டு, "போ! போய் முதலில் குளித்துவிட்டு வா!" என்று பற்பசையையும், சோப்புப் பெட்டியையும் எடுத்து அவளிடம் நீட்டினாள்.

"நான் குளிக்கவில்லை" என்றாள் மதனா, தன் முகத்தை 'உம்'மென்று தூக்கி வைத்துக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/34&oldid=1384941" இலிருந்து மீள்விக்கப்பட்டது