பக்கம்:சுயம்வரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பட்டிக்காட்டு மாமியின்
பார்வையில் பயாஸ்கோப்...

5

மாமி போட்டுக் கொடுப்பது காபியாயிருந்தாலும் சரி, சமைத்துப் பரிமாறுவது சாப்பாடாயிருந்தாலும் சரி, அவற்றைச் சாப்பிட்டே தீரவேண்டிய துர்ப்பாக்கியம் நேரும் போதெல்லாம் அதை ஒரு தண்டனையாகவே எண்ணி அனுபவிப்பது மாதவனின் வழக்கம். அந்தத் தண்டனையைக் காலையில் ஒரு தடவையும், மத்தியானம் இன்னொரு தடவையும் அனுபவித்த பின், ஒரு ‘மினித் தூக்கம்’ போட்டால் தேவலை என்று தோன்றிற்று அவனுக்கு. முதல் நாள் இரவு மதனாவுடன் கொஞ்சிக் குலாவுவதற்குப் பதிலாக மாமாவுடன் சீட்டாடிக் கொண்டிருந்தவனல்லவா அவன்? கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தது தூக்கம்; படுத்தான்.

பகற் கனவு...

த்தானும் என்னுடன் சினிமாவுக்கு வந்தால்தான் ஆச்சு!’ என்று அடம் பிடிக்கிறாள் நீலா.

இல்லை; அவள் அடம் பிடிக்கவில்லை. அவளை அடம் பிடிக்க வைக்கிறாள் மாமி.

இது என்ன தர்மசங்கடம் ? அன்று மாலை ‘பெண்கள் விடுதி’க்கு வந்து மதனாவைப் பார்ப்பதாக அல்லவா தன் கடிதத்தில் எழுதியிருந்தான் அவன்?

‘கச்சேரி கிச்சேரி எல்லாம் உங்கள் மாமாவுக்குத்தான் பிடிக்கும்; குழந்தைக்குப் பிடிக்காது!’ என்கிறாள் மாமி, கதவிடுக்கில் நின்றுகொண்டு.

‘எதிர்கால மாப்பிள்ளை’யை நேருக்கு நேராகப் பார்த்துப் பேச அத்தனை கூச்சம் அவளுக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/40&oldid=1385087" இலிருந்து மீள்விக்கப்பட்டது