பக்கம்:சுயம்வரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

39


'அத்தான் அத்தான்னு கலியாணத்துக்கு முன்னால் சொல்லக்கூடாது. மாமி!' என்று அதற்கும் ஓர் ஆட்சேபணையைக் கிளப்பப் பார்க்கிறான் இவன்.

'அதெல்லாம் அசலாருக்குத்தான்; சொந்தக்காரர்களுக்குக் கிடையாது!' என்று அடித்துச் சொல்கிறாள் அவள்.

அதைக் கேட்டு, 'அத்தான், என் அத்தான்!' என்று தனக்குத் தெரிந்த ஏதோ ஒரு சினிமாப் பாட்டை மெல்ல முணு முணுக்கிறாள் நீலா. பதிலுக்குச் 'செத்தான், செத்தான்!' என்று முணுமுணுத்து, இவன் அவளைப் பழிக்குப் பழி வாங்குகிறான்.

அதற்குள் அங்கே வந்த மாமா, "நமக்கு வேண்டிய சீட்டுக்கு ரிசர்வேஷன்கூடச் செய்துவிட்டு வந்துவிட்டேன்!" என்கிறார், தம் மனைவியிடம்.

'மாப்பிள்ளைக்கும் சேர்த்துத்தானே?' என்கிறாள் மாமி, முன்றானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு.

'அவனுக்கு இல்லாமலா? அவன் இல்லாமல் அவள்தான் சினிமா பார்க்க வருவாளா?' என்கிறார் மாமா, வாயெல்லாம் பல்லாக.

'அவளை அவளைச் சொல்கிறீர்களே, அவள் இல்லாமல் அவர் மட்டும் சினிமா பார்க்கிறேன் என்றா சொல்கிறார்?' என்று மாமி சிரித்துக்கொண்டே அவன் தலையில் 'ஐஸ்' வைக்கிறாள்...

"ஐயோ, இது என்ன அநியாயம், அக்கிரமம்!" என்று மாதவன் அலறிப் புடைத்துக்கொண்டே எழுந்து உட்கார, "ஏதாவது கனவு கினவு கண்டீர்களா?" என்று மெல்லக் கேட்டுக்கொண்டே வந்தாள் மாமி.

"ஆமாம், நரகத்துக்குப் போவது போல் கனவு கண்டேன்!" என்றான் மாதவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/42&oldid=1384959" இலிருந்து மீள்விக்கப்பட்டது