பக்கம்:சுயம்வரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

47

“அவனுக்கு அடித்த அதிர்ஷ்டம் எனக்கு எங்கே அடிக்கிறது? அவன் எதையாவது கடித்துத் தின்றுவிட்டு மீதியைக் கொடுத்தால்கூட கோபியர் அதை வாங்கித் தேவாமிர்தமாக எண்ணிச் சாப்பிட்டார்களாம். நான் கொடுத்தால் யார் சாப்பிடுகிறேன் என்கிறார்கள்?”

“ஐயோ, பாவம்! நான் வேண்டுமானால் சாப்பிட்டுத் தொலைக்கட்டுமா?”

அவள் இப்படிச் சொன்னதுதான் தாமதம், “நிஜமாகவா மதனா, நிஜமாகவா?” என்று ஆனந்தன் வாயெல்லாம் பல்லாகக் கேட்டான்.

“சந்தேகப்படக் கூடாது; எதிலும் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையே எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படை” என்றாள் அவள்.

“ஆகா! எவ்வளவு பெரிய தத்துவத்தை எடுத்து இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டாய்! அழகில் நீ ரதி மட்டுமல்ல; அறிவிலும்... அறிவிலும்...”

“யாரைச் சொல்வதென்று தெரியவில்லையா? ‘ஒளவை’ என்று சொல்லுங்களேன்?”

“சே, அவள் கிழவி”

“உண்மையான காதல் கிழவியென்றும் குமரியென்றும் பிரித்துப் பார்ப்பதில்லை; அது தெரியுமா, உங்களுக்கு?”

“அப்கோர்ஸ், இருக்கலாம்; இருட்டில் வேண்டுமானால் சிலருக்குக் கிழவியென்றும், குமரியென்றும் வித்தியாசம் தெரியாமல் இருக்கலாம். அதற்காக நான் கிழவியைக் கலியாணம் செய்துகொண்டு என்ன செய்வது? வெற்றிலை பாக்கா இடித்துக் கொடுத்துக்கொண்டிருப்பது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/50&oldid=1509420" இலிருந்து மீள்விக்கப்பட்டது