பக்கம்:சுயம்வரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சுயம்வரம்


இந்த அருணா முன்னெல்லாம் என்னுடன் போட்டி போட்டுக் கொண்டு அவரைக் காதலித்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். இப்போது என்னடா வென்றால், இவள் அவரைப் பிடிக்காதவள்போல் பேசுகிறாள். இதற்குக் காரணம் என்னவாயிருக்கும்?

'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்ற நரியின் கதையாயிருக்குமோ?

இன்று அவரைப் பிடிக்காத இவளுக்கு ஆனந்தனைப் பிடிக்கிறது. அதே சமயத்தில் அவன் கை தன்மேல் பட்டு விட்டால் மட்டும் அந்த இடத்தைத் தன்னுடைய கையால் உடனே தட்டித் துடைத்துக்கொண்டு விடுகிறாள்!

இது என்ன வேடிக்கை! இவளிடம் ஏன் இந்த மாறுபட்ட உணர்ச்சிகள்?...

நடைமுறை நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்த மதனாவால் அருணா சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை; ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. எது எப்படி யிருந்தாலும் இவளுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு, தான் 'கையில் சிலம்பில்லாத கண்ணகி'யாக எழுந்து நின்றது தவறு என்பதை அவள் இப்போது உணர்ந்தாள். அவர் வராமல், அவருடன் பேசாமல், தான் எந்தவிதமான முடிவுக்கும் வருவது அவ்வளவு சரியல்ல என்பதை அவள் இப்போது அறிந்தாள்.

ஆயினும், அதை அருணாவிடம் சொல்ல அவள் விரும்பவில்லை. அதனால் ஒருவேளை அவள் தன்னை அந்த விடுதியை விட்டே விரட்டிவிட்டால் என்ன செய்வது? வேறு எந்தப் புகலிடத்தைத் தேடுவது?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/59&oldid=1384681" இலிருந்து மீள்விக்கப்பட்டது