பக்கம்:சுயம்வரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

57


ஏமாற்றுபவர்களுக்கு எப்போதும் ஏமாறுகிறவர்களைக் கண்டால்தான் பிடிக்கும்; ஏமாறாதவர்களைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காதே!

தானும் காரியமாகும் வரை இவளிடம் ஏமாந்தவளாக நடிக்க வேண்டியதுதான்; அதை விட்டால் வேறு வழியே இல்லை.

இந்தத் தீர்மானத்துக்கு அவள் வந்துகொண்டிருந்த போது, "ஒருவேளை நாளைக் காலையிலும் அந்த மாதவன் இங்கே வராவிட்டால் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டாள் அருணா.

"ஏன், நான் அதற்குமேல் இங்கே இருக்கக் கூடாதா?" என்றாள் மதனா, அவளை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே.

"நான் அதற்குக் கேட்கவில்லையடி, அம்மா அவன் வராவிட்டால் நீ என்ன செய்வாய் என்று கேட்கிறேன்!" என்றாள் அவள் மீண்டும்.

"அதுதான் எனக்குப் புரியவில்லை!" என்றாள் அவள்.

"பேசாமல் நான் சொல்வதைக் கேள்: 'ஒரு பெண்ணை ஒருவன் கைவிட்டால், அத்துடன் இந்த உலகத்தில் அவளுக்கு வாழ்வே இல்லை' என்ற ஐதர் காலத்துச் சட்ட திட்டத்தை நம்மைப்போன்ற புதுமைப் பெண்கள் உடைத்தெறிய வேண்டும். அதற்கு இப்போது அருமையான சந்தர்ப்பம் ஒன்று வாய்த்திருக்கிறது உனக்கு. எனக்குத் தெரிந்தவரை நாளைக் காலையிலும் அந்தக் கிராதகன் இங்கே வருவது சந்தேகமே. அவன் வந்தாலும் வராவிட்டாலும் ஆனந்தன் அவசியம் வருவார்; அவர் உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கிறார்..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/60&oldid=1384686" இலிருந்து மீள்விக்கப்பட்டது