பக்கம்:சுயம்வரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சுயம்வரம்


"என்ன வேண்டுமானாலும் என்றால்...?"

"அதுதான் உடல், பொருள், ஆவி என்கிறார்களே..."

"அந்த மூன்றையும் அவர் எனக்காகத் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறாரா?"

"ஆமாம்."

"அப்படியானால் முதல் இரண்டையும் அவரையே வைத்துக்கொண்டு, கடைசியாக உள்ள ஆவியை மட்டும் எனக்காகத் தத்தம் செய்யச் சொல்லேன்!" என்றாள் மதனா, அவளைக் கெஞ்சாக் குறையாக.

அருணாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; அப்போதே அவளுடைய பெட்டியைத் தூக்கி வெளியே விட்டெறிந்து, அவளையும் அந்த விடுதியை விட்டே விரட்டிவிடலாமா என்று நினைத்தாள். ஆயினும், 'பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும்' என்று, தான் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ள சபதத்துக்கு அது விரோதமல்லவா? ஆகவே ஒருவாறு தணிந்து, "எதைக் கேட்டாலும் கேட்கா விட்டாலும் இதை மட்டுமாவது கேளடி, அம்மா! நாளைக் காலையிலும் அவன் இங்கே வராவிட்டால் நீ மனம் உடைந்து எதையாவது வாங்கிச் சாப்பிட்டு இங்கே பிராணனை விட்டு வைக்காதே; போலீசாரிடம் அகப்பட்டுக்கொண்டு விழிக்க என்னால் முடியாது!" என்றாள், அவள் வாழ்வதற்கு வழி காட்டுவதுபோல் சாவதற்கு வழி காட்டும் நோக்கத்துடன்!

"அந்தக் கவலை மட்டும் உனக்கு வேண்டவே வேண்டாம்; யார் என்னைக் கைவிட்டாலும் கைவிடா விட்டாலும், என் உயிரை மட்டும் நான் கைவிடுவதாக இல்லை" என்றாள் அவள், 'சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரி'யைப்போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/61&oldid=1384689" இலிருந்து மீள்விக்கப்பட்டது