பக்கம்:சுயம்வரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சுயம்வரம்


ஒருத்தியைக் கெடுத்து இன்னொருத்தி வாழ நினைப்பது நீதிக்கு விரோதமாயிருக்கலாம். எத்தனையோ பேர் விஷயத்தில் தூங்கிவிடும் அந்த நீதி, தன் விஷயத்தில் மட்டும் தூங்காமல் அல்லவா இருக்கிறது? அதற்காகவே அதைக் கொஞ்சம் தூங்க வைத்தால் என்னவாம்?...

என்னதான் மறக்க முயன்றாலும் மறக்க முடியாத அந்த மாதவனின் முகம்; யாரையும் புண் படுத்தாமல் சிரிக்கச் சிரிக்கப் பேசும் அவனுடைய பேச்சு; தன்னை யாராவது தாக்கிப் பேசினாலும் எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, 'சரி, முடிந்ததா? நான் வரட்டுமா?' என்று அவரிடமே சிரித்தபடி விடைபெற்று, அந்த எதிரியையே வெட்கப்பட வைக்கும் இனிய சுபாவம்; பிறரைப் பற்றித் தன்னிடம் யாராவது வந்து ஏதாவது சொன்னால்கூட 'கிடக்கிறான், விடுங்கள்!' என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுச் செல்லும் அந்தப் பெருந்தன்மை; மதனாவைத் தவிர வேறு எந்தப் பெண் தன்னை வளைய வந்தாலும், 'சாரி, ஏற்கெனவே நான் எங்கேஜ்ட்!' என்று சிரித்துக்கொண்டே சொல்லி, 'நான் ஒண்ணும் உங்களை வளைய வரல்லே; நானும் ஏற்கெனவே எங்கேஜ்ட்தான்!' என்று அந்தப் பெண்ணையே வீறாப்புடன் சொல்ல வைத்து, அவளிடமிருந்து தான் தப்பிவிடும் அந்தத் தந்திரம்!...

ஆகா நினைக்க நினைக்க இனிக்கும் அவனுடைய காதலுக்காக ஒரு பெண் தன்னுடைய காலமெல்லாம் காத்திருக்கலாம் போல் இருக்கிறதே?

ன்றிரவு மதனாவைப் பற்றியும், ஆனந்தனைப் பற்றியும், மாதவனைப் பற்றியும் அருணா இப்படியெல்லாம் எண்ணிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது, "என்ன, தூக்கம் வரவில்லையா?" என்றாள் மதனா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/65&oldid=1384696" இலிருந்து மீள்விக்கப்பட்டது