பக்கம்:சுயம்வரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

65


"அடி, அசடே! அதற்கா அழுகிறாய்? என்னைப் பற்றி யார் என்ன நினைத்தாலும் என் வழி எப்போதும் நேர் வழியாய்த்தான் இருக்கும் என்பது என்னுடன் இத்தனை நாட்கள் பழகியுமா உனக்குத் தெரியவில்லை?" என்று அவள் கண்ணீரைத் துடைத்து, அவளுடைய கன்னத்தில் ஒரு செல்லத் தட்டும் தட்டிச் சிரித்தாள் அருணா.

இந்த உலகத்தில் அவள் மட்டும்? மனித வர்க்கமே இரட்டை வேடம் போட்டுக்கொண்டுதானே வாழ்கிறது?

பொழுது விடிந்தது; சொன்னது சொன்னபடி மாதவன் வீட்டுக்கு அவசரம் அவசரமாகப் புறப்பட்டாள் அருணா.

"அவரை இங்கே அனுப்பிவிட்டு நீ அப்படியே ஆபீசுக்குப் போய்விடுவாயா?" என்றாள் மதனா, அவளைப் பரிபூரணமாக நம்பி.

"ஊஹும்; முதலில் அந்த மனுஷனைக் கொண்டு வந்து இங்கே சேர்த்துவிட்டுத்தான் ஆபீஸ் கீபீஸ் எல்லாம்" என்றாள் அவள்.

"என்னால் உனக்கு எவ்வளவு சிரமம்" என்றாள் இவள்.

"சிரமத்தைப் பார்த்தால் முடியுமா? என்னதான் யோக்கியர்களாக இருந்தாலும் ஆண்களை இந்தப் பெண்கள் விஷயத்தில் மட்டும் நம்ப முடியவில்லையே!" என்று கொஞ்சம் 'பொடி' வைத்து ஊதிக்கொண்டே சென்றாள் அவள்.

இத்தனை முன்னேற்பாட்டுடன் அங்கே சென்ற அருணா, மாதவனை வெளியே அழைத்து, அவனிடம் பரம ரகசியமாகச் சொன்னது இது:

"மதனாவைக் காணோம்!"

சு-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/68&oldid=1384704" இலிருந்து மீள்விக்கப்பட்டது