பக்கம்:சுயம்வரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு சந்தேகம் -
பைத்தியக்காரர்கள் உள்ளே அதிகமா,
வெளியே அதிகமா?...


9


தனாவைக் காணோம்!’ - எடுத்த எடுப்பிலேயே இப்படி மாதவனிடம் சொல்லிவிடவில்லை அருணா. வீட்டுக்குள் இருந்த அவனை ஜன்னல் வழியே பார்த்துக் கண் அசைத்து, வாய் அசைத்து, கையசைத்து மெல்ல வெளியே வரவழைத்துக் கொண்டதும், அவள் மேலே பார்த்தாள்; கீழே பார்த்தாள். மயங்கி மருகினாள்; தயங்கித் தடுமாறினாள். “ஏதோ சொல்லவேண்டுமென்று வந்தேன். இப்போது சொல்ல வேண்டாம்போல இருக்கிறது; வருகிறேன்!” என்று திரும்பினாள்; சிறிது தூரம் சென்றதும் அவளே திரும்பி, “நீங்கள் வரும்வரை அங்கேயே நான் காத்திருந்திருக்கலாம். அதற்குள் இங்கே வந்தது தப்பு என்று இப்போதுதான் தெரிகிறது எனக்கு” என்றாள்.

தனக்கே இயல்பான பொறுமையுடன் அவளுடைய சேட்டைகள் அத்தனையையும் கவனித்துக்கொண்டிருந்த மாதவன், “என்னதான் விஷயம். சொல்லேன்?” என்றான்.

“சொன்னால் அதை நீங்கள் தாங்குவீர்களோ, என்னவோ?” என்றாள் அவள், நகத்தைக் கடித்துக் கீழே துப்பிக்கொண்டே.

“தாங்குவேன், சொல்லு!” என்றான் அவன், அவளிடமிருந்து சற்றே விலகி நின்று.

“மனம் உடைந்து போய் அப்படியே உட்கார்ந்துவிட மாட்டீர்களே?” என்றாள் அவள், தன் கண்களை மேலே உயர்த்தி,

“மாட்டேன், சும்மா சொல்லு?” என்றான் அவன், அப்போதும் கலங்காமல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/69&oldid=1385135" இலிருந்து மீள்விக்கப்பட்டது